ஐரோப்பிய ஒன்றியம் துருக்கி மீது ஒருபோதும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை: எர்டோகன் சாடல்!

ஐரோப்பிய ஒன்றியம் தனது நாட்டை நோக்கி ஒருபோதும் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
ஆனால், தம் மீது சுமத்தக்கூடிய எந்தவொரு பொருளாதாரத் தடைகளிலும் அங்காரா கவலைப்படவில்லை என்றும் கூறினார்.
கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிவாயு வளங்கள் தொடர்பாக கிரேக்கம் மற்றும் சைப்ரஸுடனான மோதலை முடிவுக்கு கொண்டுவர துருக்கி தவறிவிட்டது என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்தனர். இதன் பின்னணியில் அவர் இந்த கருத்தினை வெளியிட்டார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘ஐரோப்பிய ஒன்றியம் ஒருபோதும் நேர்மையாக செயற்படவில்லை. அது ஒருபோதும் துருக்கியை நோக்கி தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் நாங்கள் எப்போதும் பொறுமையாக இருந்தோம். நாங்கள் இன்னும் பொறுமையாக இருக்கிறோம்.
துருக்கிக்கு எதிராக எடுக்கக்கூடிய எந்தவொரு பொருளாதாரத் தடை முடிவு தொடர்பாக, எங்களுக்கு பெரிதாக கவலை இல்லை.
முரண்பாடான கடல்சார் கூற்றுக்கள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக்கொண்ட போதிலும் துருக்கியுடனான பேச்சுவார்த்தைகளில் இருந்து கிரேக்கம் ஓடியது. கிழக்கு மத்தியதரைக் கடலில், எங்களுடைய உரிமைகள் எதுவாக இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம்
இங்கு ஒருபோதும் சமரசம் செய்வது எங்களுக்கு ஒருபோதும் சாத்தியமில்லை. ஆனால் கிரேக்கம் உண்மையிலேயே ஒரு அண்டை நாடாக நேர்மையாக செயற்பட்டால், நாங்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையை தொடருவோம்’ என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.