ஐ.நா.வில் இலங்கைக்கு கொடுக்கப்படும் அழுத்தம் தமிழர்களை அடக்கு முறைக்குள் உள்ளாக்க கூடாது- சார்ள்ஸ்
In ஆசிரியர் தெரிவு January 26, 2021 2:54 am GMT 0 Comments 1559 by : Yuganthini

ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும் எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வகையில் அமைய வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சார்ள்ஸ் நிர்மலநாதன் மேலும் கூறியுள்ளதாவது, “1958 களில் ஆரம்பித்த தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு அடக்கு முறை 2009 இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இராணுவ பிடிக்குள் அடிமைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
நடைபெற இருக்கின்ற ஐ.நா.மனித உரிமை கூட்டத் தொடரில், இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது அரசும் இராணுவமும் எந்த ஒரு அடக்கு முறைகளையும் பிரயோகிக்காத வண்ணம் இருக்க வேண்டும்.
போர்க்குற்றங்கள் தொடர்பான குழு நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு எந்த விதமான தகுதிகளும் இல்லை. கோட்டாபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக இருந்த போதுதான் போர்க் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது.
போர்க் குற்றம் புரிந்தவர்களே போர்க்குற்றத்தை விசாரிப்பதற்கு குழு நியமிப்பது ஒரு கேளிக் கூத்தான விடயம். இந்த குழுவை சர்வதேசமோ ஐ.நா மனித உரிமைப் பேரவையோ எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
அவர்களும் இதை ஒரு கேளிக்கை விடயமாகவே பார்ப்பார்கள். நாட்டினுடைய ஜனாதிபதியாக இருந்து கொண்டு சர்வாதிகார போக்கிலான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இருக்கின்றது.
1958 காலப் பகுதியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் 2009ஆம் ஆண்டு மிகப் பெரிய இனப்படுகொலை நடந்த பின் அதன் தொடர்ச்சியாக தமிழ் மக்களை இராணுவப்பிடிக்குள் வைத்து தமிழர்களின் நில அபகரிப்பு, மத அடையாளங்கள் அழிப்பு, கலாசாரங்கள் அழிப்புக்கள் தொர்ந்து கொண்டிருக்கின்றது.
மேலும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு உயர் பதவிகளும் அமைச்சின் செயலாளர்களாகவும் வெளிநாட்டு தூதுவர்களாகவும் நியமிக்கப்பட்டு வருவதானது அரசாங்கமே போர்க்குற்றங்களை செய்துள்ளது வெளிப்படையாக தெரிகின்றது.
கொரோனா மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் இவற்றை காரணம் காட்டி இராணுவ சோதனை சாவடிகள் அதிகரிக்கப்பட்டு வடக்கு கிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பிற்குள் தள்ளப்பட்டுள்ளது.
நடைபெற இருக்கும் ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரின் தீர்மானத்தின் ஊடாக இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களால் தமிழ் மக்கள் மீதான அரசின் அடக்கு முறை அச்சுறுத்தல்கள் இல்லாமல் செய்யப்பட வேண்டும்.
அதேவேளை2009 இறுதி யுதத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும். யுத்த குற்றம் தொடர்பான உண்மை நிலை என்ன ? என்பது அனைத்து உலத்திற்கும் வெளிப்படையாக தெரிய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.