ஐ.பி.எல்.இன் தாக்கம் உலகக்கிண்ண தொடரில் எதிரொலிக்காது: கோஹ்லி குறித்து ஹொக் கருத்து

ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியின் செயற்பாடு, எதிர்வரும் உலகக்கிண்ண தொடரில் கோஹ்லியின் செயற்பாட்டில் எதிரொலிக்காது என அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரட் ஹொக் கூறியுள்ளார்.
நடப்பு தொடரில் மோசமாக விளையாடிவரும் பெங்களூர் றோயல் செலஞ்சர்ஸ் அணி, இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் அனைத்திலுமே தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், உலகக்கிண்ண தொடரில் கோஹ்லி அணியை எவ்வாறு கொண்டு நகர்த்த போகிறார், அவர் எவ்வாறு பிரகாசிக்க போகின்றார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரட் ஹொக்,
“இது எந்த வகையிலும் உலகக் கிண்ண தொடரில், கோஹ்லியின் துடுப்பாட்டத்தை பாதிக்காது. அவர் தனிப்பட்ட முறையில் வெற்றி பெறும் தீவிரத்தில் உள்ளார். பெங்களூர் அணி கோஹ்லி- டிவில்லியர்ஸையே முற்றிலும் சார்ந்துள்ளது.
நடுத்தர வரிசை சரிவர விளையாடவில்லை. பந்து வீச்சும் சீராக இல்லை. அவர்கள் தங்கள் உத்திகளை சரிவர செயற்படுத்தவில்லை. அணி நிர்வாகம் அமர்ந்து பேசி நிலைமையை சீர் செய்ய வேண்டும்” என கூறினார்.
ஐ.பி.எல். தொடரின் இன்றைய போட்டியில், பெங்களூர் அணி வென்றால் மட்டுமே பிளே ஒஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற கட்டாயத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.