ஐ.பி.எல். திறனை கொண்டு உலகக்கிண்ண அணியை தேர்வு செய்ய முடியாது: ரோஹித் சர்மா
ஐ.பி.எல். தொடரில் விளையாடும் திறனை அடிப்படையாக கொண்டு, உலகக்கிண்ண தொடருக்கான தேர்வு செய்ய முடியாது என இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடைபெற்ற இணையதள அறிமுக நிகழ்ச்சியொன்றில், கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“இந்திய உலகக் கிண்ண அணி ஏறக்குறைய உறுதியாகி விட்டது. குறிப்பாக ஒன்றிரண்டு இடங்களை நிரப்ப வேண்டியுள்ளது. இதில் அணித்தலைவர் கோஹ்லியின் விருப்பத்துக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை தரும்.
இங்கிலாந்தில் நிலவும் சூழலைப் பொறுத்து, அந்த இடத்தில் எவரை களமிறக்குவது என முடிவு செய்யப்படும். கூடுதலாக தேவைப்படும் வீரர் தொடர்பாக தலைமைப் பயிற்சியாளர், அணித்தலைவர் தீர்மானிப்பர்.
கூடுதலாக நடுத்தர வரிசை துடுப்பாட்ட வீரர், ஆரம்ப துடுப்பாட்ட வீரர், வேகப்பந்துவீச்சாளர், சுழற்பந்து வீச்சாளர் தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு கோடையில் இங்கிலாந்தில் நாங்கள் விளையாடிய போது, வறண்ட வானிலை காணப்பட்டது. வரும் கோடைக்காலத்திலும் இதை நிலை இருக்கும் எனத் தெரியவில்லை.
கடந்த 4 ஆண்டுகளில் வீரர்களின் திறமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும். ஐ.பி.எல் திறன்படி கூடாது. 20 ஓவர்கள் போட்டி அடிப்படையில் 50 ஓவர்கள் அணியை தேர்வு செய்ய முடியாது” என கூறினார்.
ரோஹித் சர்மா தற்போது, ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவராக விளையாடி வருகிறார்.
31 வயதான ரோஹித் சர்மா, இதுவரை 206 ஓருநாள் போட்டிகளில் விளையாடி 8010 ஓட்டங்களை குவித்துள்ளார். இது மூன்று இரட்டை சதங்கள், 22 சதங்கள், 41 அரை சதங்கள் அடங்கும். சராசரி 47.4 ஆகும்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.