ஐ.பி.எல். ரி-20 தொடர்: ரஸ்ஸல்சின் அதிரடி துடுப்பாட்டத்தின் துணையுடன் கொல்கத்தா அணி வெற்றி

ஐ.பி.எல். ரி-20 தொடரின் 47ஆவது லீக் போட்டியில், ஆந்ரே ரஸ்ஸல்சின் அதிரடி துடுப்பாட்டத்தின் துணையுடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, அதிரடியாக துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கபட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 232 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஆந்ரே ரஸ்ஸல் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும், சுப்மான் கில் 76 ஓட்டங்களையும், கிறிஸ் லின் 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் ராகுல் சஹார் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனையடுத்து, 233 என்று சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியால், 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 34 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியின் மூலம், பிளே ஓஃப் சுற்றுக்கான வாய்ப்பை கொல்கத்தா அணி தக்கவைத்துக் கொண்டது.
இதன்போது மும்பை அணி சார்பில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக, ஹர்திக் பாண்ட்யா 91 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் சுனில் நரைன், ஹரி குர்னே மற்றும் ஆந்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுளை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சில் அசத்திய கொல்கத்தா அணியின் சகலதுறை வீரர் ஆந்ரே ரஸ்ஸல் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.