ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரிலிருந்து முக்கிய வெளிநாட்டு வீரர்கள் விலகல்!
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். ரி-20 லீக் தொடர், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகின்றது.
இந்த தொடரின் ஒவ்வொரு போட்டிகளுமே இரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது என்றால் அது மிகையாகாது.
இதற்கிடையில் இத்தொடரில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள், அவ்வப்போது உபாதைக்குள்ளாகின்றனர். ஆகையால் அவர்களுக்கு பதிலாக பல வீரர்களும் உள்வாங்கப்படுகின்றனர்.
மேலும், பல சானைகள் பதிவு செய்யப்படுகின்றன. வீரர்களுக்குள் முரண்பாடுகள், வீரர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், இதுபோன்ற செய்திகள் குறித்து அறிந்துக் கொள்ள இரசிகர்கள் ஆவலாக உள்ளனர். அவ்வாறான செய்திகளை தற்போது பார்க்கலாம்,
அந்த வகையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண தொடருக்காக வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றுள்ள அவுஸ்ரேலியா, இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் வீரர்கள், உலகக்கிண்ண தொடருக்காக தயாராகுவதற்காக, ஐ.பி.எல். தொடரின் இடைநடுவே நாடு திரும்பவுள்ளனர்.
இதில், அவுஸ்ரேலிய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதனால், உலகக் கிண்ண தொடரில், பங்கேற்கும் வீரர்கள் பிரிஸ்பேனில் நடைபெறும் பயிற்சி முகாமில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அவுஸ்ரேலிய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
ஆகவே, ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள்ள டேவிட் வோர்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டொய்னிஸ் மற்றும் ஜேசன் பெஹென்ட்ரோப் ஆகிய அவுஸ்ரேலிய வீரர்கள், கடைசி கட்டப் போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த பயிற்சி முகாமில், மூன்று பயிற்சி போட்டிகள் நடைபெற உள்ளன. அவுஸ்ரேலிய பதினொருவர் மற்றும் நியூசிலாந்து பதினொருவர் அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று பயிற்சி போட்டிகளும் அலென் போர்டர் மைதானத்தில் நடைபெறுகிறது.
………..
இதேபோல, இங்கிலாந்து கிரிக்கெட் அணி, உலகக் கிண்ண தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணியுடன் ஒரு ரி-20 போட்டியிலும், பாகிஸ்தான் அணியுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவுள்ளது.
ஆகையால், ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர்களான, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, ஜோனி பேர்ஸ்டோவ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய வீரர்கள் எதிர்வரும் 25ஆம் திகதியுடன் நாடு திரும்பவுள்ளனர்.
ஏற்கனவே பெரும்பாலும் பிளே சுற்றுக்கான வாய்ப்பினை இழந்துள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகிய முக்கிய வீரர்கள் இல்லாமல் இறுதிகட்ட போட்டிகளில் ஆட்டம் காணவுள்ளது.
…………..
மேலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரரான பங்களாதேஷின் சகீப் அல் ஹசன், உலகக் கிண்ணத் தொடரின் பயிற்சிக்காக நாடு திரும்பவுள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சகீப் அல் ஹசன் அணியில் இருந்து விலகினார். நாடு திரும்பிய அவர் குணமடைந்த பிறகு ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் இணைந்து கொண்டார்.
ஹைதராபாத் அணிக்காக இரண்டு போட்டிகளில் மாத்திரமே அவர் விளையாடினாலும், அந்த 2 போட்டிகளிலும் சிறப்பாக செயல்படாததால், வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்குப் பதிலாக மொஹமட் நபி விளையாடி வந்தார்.
இந்த நிலையில், சகீப் அல் ஹசன் தற்போது உலகக் கிண்ண தொடருக்கு செல்லும் 15 பேர் கொண்ட பங்களாதேஷ் அணியின் உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 5ஆம் திகதி அயர்லாந்தில் ஆரம்கபமாகவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடரிற்கான அணியிலும் இடம்பெற்றுள்ளார். எனவே, பயிற்சிக்காக அவர் விரைவில் நாடு திரும்பவுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.