ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா நிறுவன தடுப்பூசிக்கு மெக்ஸிகோ ஒப்புதல்!

ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா நிறுவனங்கள் கூட்டாக இணைந்து உருவாக்கிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்கு மெக்ஸிகோ அரசாங்கம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உலகில் கொரோனா இறப்பு அதிகமுள்ள நாடுகளில் ஒன்றான மெக்ஸிகோவில் ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதனை துணை சுகாதார அமைச்சர் ஹ்யூகோ லோபஸ்-கேடெல் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது மெக்ஸிகோவால் அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆகும். முன்னதாக கடந்த டிசம்பர் 24ஆம் திகதி கொரோனா ஃபைஸர் தடுப்பூசி மெக்ஸிகோவில் பயன்பாட்டுக்கு வந்தது.
சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டதில் நான்கில் ஒரு பங்கினர் தடுப்பூசி பெற்றுவிட்டதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுவரை 30,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா நிறுவன தடுப்பூசிக்கு ஏற்கனவே பிரித்தானியா, அர்ஜென்டினா உள்ளிட்ட நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.