ஒட்டுமொத்த நாடும் கொரோனாவில் சிக்கியமைக்கு அரசாங்கத்தின் இயலாமையே காரணம்- ராஜித
In இலங்கை December 15, 2020 10:21 am GMT 0 Comments 1394 by : Yuganthini
அரசாங்கத்தின் இயலாமையினாலேயே இன்று ஒட்டுமொத்த நாடே கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். ராஜித சேனாரட்ன மேலும் கூறியுள்ளதாவது, “இன்று நாடளாவிய ரீதியாக கொரோனா தொற்று வேகமாக பரவிவருகிறது. அமெரிக்காவிலுள்ள சுகாதார ஆய்வு மையமொன்று, இலங்கையை அதிக ஆபத்துள்ள நாடுகளின் பட்டியலில் இணைத்துக் கொண்டுள்ளது.
இந்த அரசாங்கத்தின் இயலாமையினாலேயே இன்று இந்த நிலைமையில் நாம் இருக்கிறோம். இதுதொடர்பாக நாம் நாடாளுமன்றிலும் உரையாற்றியுள்ளோம்.
அரசாங்கத்தின் பிழைகளை சுட்டிக்காட்டியுள்ளோம். எனினும், அரசாங்கம் இதனை கேட்காமல், புதிது புதிதாக மருந்துகளை கண்டுப்பிடித்தக் கொண்டிருக்கிறது.
அண்மையில், மருத்துவர் ஒருவரினால் தயாரிக்கப்பட்ட பாணம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள்.
சுகாதார அமைச்சிரினாலேயே, இந்த தனியார் நபரின் தயாரிப்பிலான குறித்த பாணம் வழங்கப்பட்டது. பின்னர், இது கொரோனாவுக்கானது அல்ல என்று கூறப்பட்டது. இவர்களின் செயற்பாடுகள் அச்சத்தை தான் ஏற்படுத்துகின்றன.
உலகமே பல்வேறு ஆய்வுகளுக்கு மத்தியில் கொரோனா ஒழிப்பு மருந்தை கண்டு பிடித்துக் கொண்டிருக்கும்போது, அரசாங்கத்தரப்பினரோ புதிது புதிதாக பாணங்களை பருகிக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு புதிது புதிதாக பாணங்கள் இன்னமும் வந்துக் கொண்டுதான் இருக்கின்றன. கடந்த ஆட்சிக்காலத்தில் இவ்வாறான காரியங்கள் இடம்பெற்றுள்ளனவா?
தேசிய ஒளடத சங்கம், இவ்வாறான பாணங்களை பருக வேண்டாம் என மக்களுக்கு தெரிவித்துள்ளனர். ஆயுர்வேத வைத்தியர் சங்கமும் இந்தப் பாணங்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.
அரசாங்கம் இந்த ஊடக நாடகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.