ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது – காஞ்சன விஜயசேகர
In ஆசிரியர் தெரிவு January 25, 2021 6:40 am GMT 0 Comments 1417 by : Jeyachandran Vithushan

நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
மாத்தறை பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார்.
முதலாவது அலையை முடக்க கட்டுப்பாடுகள் மூலம் கட்டுப்படுத்த அரசாங்கத்தால் முடிந்தது என குறிப்பிட்ட அவர், பொருளாதாரத்தையும் நாட்டையும் தொடர்ச்சியாக நிறுத்திவைக்க முடியாது என ஜனாதிபதி கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால், சுற்றுலாத்துறையினால் கிடைக்கும் சுமார் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை நாடு இழந்தது என்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகர சுட்டிக்காட்டினார்.
தாக்குதல்களுக்குப் பின்னர் நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும் அன்றிலிருந்து அத்துறை மீளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு கடன் சுமையில் இருந்தபோது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்றும் இருப்பினும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் வட்டி விகிதத்தைக் குறைக்கவும் தங்களால் முடிந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.