‘ஒற்றுமை சிலை’ நோக்கி தமிழ்நாட்டிலிருந்து ரயில் போக்குவரத்தை ஆரம்பித்துவைத்தார் மோடி

தமிழ்நாட்டின் சென்னை உட்பட பல மாநிலங்களில் இருந்து குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு எட்டு புதிய ரயில் சேவைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த ரயில் சேவைகளை, பிரதமர் மோடி காணொளி தொடர்பாடல் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த நிகழ்வில் குஜராத் முதல்வர் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றுகையில், “முதன்முதலில் கெவாடியாவை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்ற திட்டம் முன்வைக்கப்பட்டபோது, குறுகிய காலத்தில் இதனைச் செயற்படுத்த முடியாது என கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
அப்போது, கெவாடியாவுக்கு சரியான சாலை வசதி இல்லை, ரயில் போக்குவரத்தும் இல்லை. இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ள குக்கிராமம் போலவே கெவாடியாவும் இருந்தது.
ஆனால், ஒரு சில ஆண்டுகளிலேயே கெவாடியா முற்றிலுமாக மாறியுள்ளது. சாலை வசதி மேம்படுத்தப்பட்டதுடன் ரயில் சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் எட்டு பகுதிகளில் இருந்து கெவாடியாவுக்கு தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை, இன்னும் சில ஆண்டுகளில் இப்பகுதியை சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்றிவிடும் என்பதில் ஐயமில்லை. சரியான திட்டமிடல் இருந்தால் எந்தத் இடத்தின் சூழலையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.