ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 தனி வீடுகள் அமைக்கும் பணி ஆரம்பம்!
In இலங்கை February 22, 2021 8:57 am GMT 0 Comments 1154 by : Vithushagan
தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 24 தனி வீடுகளை கட்டி அமைக்க இன்று (திங்கட்கிழமை) அடிக்கல் நாட்டப்பட்டது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இந்த அடிக்கல் நாட்டும் வைபவம் இடம்பெற்றது.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தலைமை தாங்கி அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இதன்போது இவ் நிகழ்வில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் உள்ளிட்ட தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் பாரதிதாசன், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
குறித்த ஒரு வீட்டிற்கு 13 இலட்சம் ரூபா செலவிடப்படுகின்றது. இந்த நிதி உதவியை தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு வழங்குகின்றது.
அத்தோடு ஒரு வீட்டில் 2 அறைகள், விராந்தை, குளியலறை மற்றும் மலசலகூடம் என அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு வீடும் தனித் தனி வீடுகளாக கட்டப்படுகின்றது.
இதேவேளை, குறித்த ஒலிரூட் தோட்டத்தில் சகல வசதிகளையும் உள்ளடக்கிய வகையில் நிர்மாணிக்கப்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையமும், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையம் மேற்படி ராமேஷ்வரனின் வேண்டுகோளுக்கமைய தோட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைய மனித வள அபிவிருத்தி நிதியத்தின் சுமார் ஒரு கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் சகல வசதிகளுடன் நிர்மானிக்கப்பட்டது.
விளையாட்டு அறை, வாசிப்பு அறை, ஓய்வறை, சாப்பாட்டு அறை, சமையல் அறை, சிறுவர் பராமரிப்பு உதவியாளர்களுக்கான அறை, பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, குழந்தை அறை, விளையாட்டு பொருட்களுக்கான அறை, குழந்தைகளுக்கான கழிவறை ஆகியன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின் போது, சிறுவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனால் மரநடுகையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் உள்ளிட்ட தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் பாரதிதாசன், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள், தோட்ட முகாமையாளர்கள், பொது மக்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.