ககன்யான் திட்டத்தில் காலத்தாமதம் ஏற்படும் – சிவன்
In இந்தியா December 8, 2020 3:03 am GMT 0 Comments 1355 by : Krushnamoorthy Dushanthini

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் காலத்தாமதம் ஆகலாம் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் விண்வெளி திட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.
2022-ம் ஆண்டு இந்த திட்டம் அமுல்படுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்து இருந்தது. இதற்காக இந்திய விமானப்படையில் பணியாற்றும் 3 வீரர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ரஷ்யாவில் விண்வெளி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தொற்று நோய் காரணமாக இந்த திட்ட அமுலாக்கம் ஒரு ஆண்டுக்கு தள்ளிப்போகலாம் என இஸ்ரோ கூறியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், ‘மனிதர்களை விண்ணுக்கும் அனுப்பும் ககன்யான் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்துகிறது. இதை வருகிற 2022-ம் ஆண்டு அமல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
அதற்கு முன்பு இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு (2021) ஜூலை ஆகிய மாதங்களில் ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக திட்டமிட்டப்படி விண்ணில் செலுத்துவதில் காலதாமதம் ஆகும். இதை அடுத்த ஆண்டு செயல்படுத்துவோம் அல்லது அதற்கு அடுத்த ஆண்டு இந்த பணிகள் நடைபெறும். அதனால் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை செயல்படுத்த ஒரு ஆண்டு தள்ளிப்போகலாம்.
சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லேண்டர், ரோவரை தயாரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்த சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்த நாங்கள் இன்னும் திகதியை முடிவு செய்யவில்லை. வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய சுக்ரயான் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இதில் எந்த மாதிரியான ஆய்வு கருவிகளை அனுப்புவது என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.