கட்டுவன் – மயிலிட்டிக்கு இடையிலான சுமார் 400 மீற்றர் வீதியை மீள வழங்குமாறு கோரிக்கை!
In ஆசிரியர் தெரிவு January 4, 2020 7:50 am GMT 0 Comments 2100 by : Benitlas

கட்டுவன் – மயிலிட்டி இடையிலான சுமார் 400 மீற்றர் வீதியை மீள வழங்குமாறு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் பாதுகாப்பு செயலருக்கு கடிதம் எழுதியுள்ளர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் பணிப்புக்கமையவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
குறித்த 400 மீற்றர் நீளமான வீதியை திறப்பதற்கு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத் தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இதற்கமையவே இந்த கடிதம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில், ‘மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தி வரையான மயிலிட்டி வடக்கு பகுதி விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும் கட்டுவன் – மயிலிட்டி வீதியின் ஒரு பகுதி பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வீதி பலாலி விமான நிலையம் மற்றும் மயிலிட்டித் துறைமுகத்துக்கான பிரதான வீதியாகக் காணப்படுகிறது.
அதனால் பெரும்பாலான மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் பிரதான வீதிக்குப் பதிலாக தனியார் காணி ஊடான மாற்றுப்பாதையால் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கட்டுவன் சந்தி தொடக்கம் மயிலிட்டிச் சந்திவரையான வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.