கண்டியில் தமிழ் பாடசாலைகளில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும் – ஹக்கீம்
In இலங்கை December 3, 2020 8:04 am GMT 0 Comments 1498 by : Dhackshala

கண்டி மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவிவரும் ஆளணிப் பற்றாக்குறைகள், பௌதிக வளத் தேவைகள் போன்றவை நிவர்த்திக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.
வரவு – செலவுத் திட்ட, கல்வி அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “கண்டி மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் குறிப்பாக தமிழ் மொழி மூல தேசிய பாடசாலைகள் பலவற்றிலும் ஆளணிப் பற்றாக்குறைகள், பௌதிக வளம் மற்றும் கட்டடத் தேவைகள் என்பன உட்பட ஏராளமான பிரச்சினைகள் காணப்படுகின்றன.
மடவளை மதீனா தேசிய பாடசாலை, கம்பளை ஸாஹிரா தேசிய பாடசாலை உட்பட பல பாடசாலைகள் இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களாக எதுவித புதிய கட்டட நிர்மாண வசதிகளும் செய்து கொடுக்கப்படாத நிலையில் அந்த தேசியப் பாடசாலைகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
கல்ஹின்ன தேசிய பாடசாலை, அக்குரணை சாஹிரா பாடசாலை, அக்குறணை அஸ்ஹர் மத்திய கல்லூரி போன்ற பல பாடசாலைகளில் சில தசாப்தங்களாகவே புதிய கட்டடங்கள் எவையும் நிர்மாணித்துக் கொடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது.
அத்துடன் இப்பாடசாலைகளில் சில பாடவிதானங்களுக்குரிய ஆசிரிய குறைப்பாடுகளும் இருக்கின்றன என்பதை கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.