கண்டி- மஹியாவ பகுதியை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை!
In இலங்கை January 8, 2021 5:01 am GMT 0 Comments 1264 by : Yuganthini

ஒரு மாதகாலமாக முடக்கப்பட்டுள்ள கண்டி, மஹியாவ பகுதியை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியிடம், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித்தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சுகாதார அமைச்சரை நேரில் சந்தித்து, மஹியாப பகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் எடுத்துரைத்துள்ளார்.
அவர் சுகாதார அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாவது, “கொரோனா வைரஸ் பரவலையடுத்து கண்டி மாநகர எல்லைக்குட்பட்ட மஹியாவ பகுதி கடந்த டிசம்பர் 8 ஆம் திகதி முதல் முடக்கப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் வாழும் சுமார் 3 ஆயிரம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
மஹியாவ பகுதி இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டாலும் அங்கு திட்டமிட்ட அடிப்படையில் அரச மற்றும் சுகாதார பொறிமுறை இயங்கவில்லை. இதன்காரணமாகவே ஒரு மாதம்வரை முடக்கல் நடவடிக்கை காலவரையறையின்றி தொடர்கின்றது.
அப்பகுதியில் வாழும் அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை. பி.சி.ஆர்.பரிசோதனை மற்றும் உடனடி எட்டிஜன்ட் பரிசோதனை ஆகியன திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் தொற்றாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டுசென்று, 14 நாட்களுக்கு பிறகு மஹியாப பகுதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்திருக்கலாம்.
எனவே, இனியும் தாமதம் வேண்டாம். உடனடி என்டிஜன் பரிசோதனைகளை துரிதப்படுத்தி, தனிமைப்படுத்தலில் இருந்து மஹியாவ பகுதியை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என வேலுகுமார் கோரியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.