கனடாவுக்கு முதல் தவணை கொவிட்-19 தடுப்பூசி வந்தடைந்தது!

கனடாவுக்கு முதல் தவணை கொரோனா வைரஸ் தடுப்பூசி வந்தடைந்துள்ளதனை, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ புகைப்படங்களை சுட்டுரையில் பதிவிட்டு உறுதிசெய்துள்ளார்.
‘தடுப்பூசி கிடைக்கப் பெற்றது மகிழ்ச்சியான செய்தி. அதே வேளையில், கொரோனாவுக்கு எதிரான போர் இன்னும் முடிவடையவில்லை என்பதால் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
குடிமக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும், அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், அரசாங்கத்தின் செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய முடியும்’ என பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் ஃபைஸர், ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசிக்கு கனடா சுகாதார ஒழுங்காற்று அமைப்பு அண்மையில் அனுமதி அளித்தது.
இந்தத் தடுப்பூசிகள் நாடு முழுவதும் உள்ள 14 விநியோக மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. கியூபெக் மாகாணத்தில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் தங்கியுள்ளவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபைஸர்- பயோஎன்டெக் நிறுவனங்களுடன் கனடா அரசாங்கம், மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தில் அண்மையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதால் டிசம்பர் இறுதிக்குள் 2 லட்சத்து 49 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும்.
இதுதவிர 6 மருந்து நிறுவனங்களுடன் கனடா அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. தற்போது, மேலும் மூன்று தடுப்பூசிகளைப் பரிசீலித்து வருவதாகவும், இதில் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு சுகாதாரத் துறையினர் விரைவில் அனுமதி அளிக்க உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனடா மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைவிட கூடுதலாகப் பெற திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக கொள்முதல் செய்யும் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுக்கு அன்பளிப்பாக வழங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.