கபட நாடகங்களில் ஒன்றே காங்கிரஸின் தேர்தல் அறிக்கை: மோடி
In இந்தியா April 6, 2019 4:57 am GMT 0 Comments 2491 by : Yuganthini

மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெறும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. அக்கட்சினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையும் அதன் கபட நாடகங்களில் ஒன்றென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெறவுள்ள தேர்தல் குறித்து இந்தியாவிலுள்ள தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே நரேந்திர மோடி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
‘‘இனம், மதம் என பேதம் பார்த்து நான் மக்களுக்கு சேவையாற்றவில்லை. அனைவருக்கும் பொதுவான சேவையே வழங்க விரும்புகின்றேன்.
அந்தவகையில் கடந்த 60 மாதங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களினால் நாடு பெரும் வளர்ச்சியை கண்டுள்ளதுடன், ஆட்சி நிர்வாகத்திலும் முழுமையான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டை விட்டுத் தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடி போன்றவர்கள் தற்போது சிறையிலுள்ளனர். குற்றம் செய்பவர்களை, தற்போதைய அரசு உடனடியாக தண்டித்து நியாயத்தை பெற்றுத்தருகின்றது.
ஆனால், இவ்வளவு காலமாக நாட்டை அழித்த காங்கிரஸ், தேர்தலில் வெற்றியடைவதற்காக பொய்யான வேலைத்திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது.
மேலும், யார் தேர்தலில் போட்டியிட்டாலும் எந்ததொரு அச்சமும் எனக்கு இல்லை” என நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.