கருணா அம்மானை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லை? – சார்ள்ஸ் கேள்வி
In ஆசிரியர் தெரிவு April 1, 2019 7:50 am GMT 0 Comments 4242 by : Benitlas
தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த கருணா அம்மான் எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரனை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஏன் கைது செய்யவில்லையென கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த வருடத்திற்கான வரவு செலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதம் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
மிக முக்கியமாக இலங்கையில் யுத்தம் ஏற்பட்ட காலத்தில் நடைமுறையில் இருந்த பயங்கரவாத தடைச்சட்டம் யுத்தம் முடிந்து 10 வருடங்களாகியும் இன்று வரை நடைமுறையில் இருக்கின்றது.
அந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் மூலம் அதாவது சாட்சிகள் இல்லாமல் ஒருவரை கைது செய்ய முடியும்.
கைது செய்கின்ற நபர் அவரை துன்புறுத்தி அந்த துன்புறுத்தலின் மூலம் அவர் தான் குற்றங்களை செய்ததாக ஒப்புக்கொண்டால் அவர்களுக்கு நீண்டகால தண்டனை வழங்குவதற்கு விசாரணையற்ற முறையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு குற்றத்தடுப்பு பிரிவுக்கு ஜனாதிபதியால் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
அந்த சட்டத்தின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மறைமுகமாக உதவி செய்ததின் அடிப்படையில் 100 இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக 10 வருடங்களுக்கு மேலாக இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் சிறு சிறு குற்றங்கள் செய்ததாக தெரிவித்திருக்கின்றனர். இவர்கள் அரசியல் ரீதியான கைதிகள்.
தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரனை அதாவது கருணா அம்மான் என்று கூறுகின்ற அந்த நபரை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாங்கள் ஏன் கைது செய்யவில்லை, விசாரணை செய்யவில்லை என்பதை அமைச்சர் இந்த சபைக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் தெளிவுப்படுத்த முடியுமா என்று நான் கேட்டு கொள்ள விரும்புகின்றேன்.
அதேபோன்று கே.பி மற்றும் பிள்ளையான் ஆகியோர் கைது செய்யப்படவில்லை அல்லது விசாரணைக்கு உட்படுத்தபடவில்லை என்பது குறித்து அமைச்சர் இந்த சபைக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது கோரியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.