கருப்பிரவினை காதலிக்கிறேன்
April 15, 2018 3:21 pm GMT
பகல்கள் போலியானவை!
அந்தரங்கம் காக்க இயலா
ஆபத்தான தோழமை
களிப்பிற்கு மட்டும் பழக்கப்பட்ட
புரிதலற்ற தீர்வுகள்
நெரிசல், சத்தத்தை பிரசவிக்கும்
எந்திர கருவறைகள்
வெப்பத்தை படியளக்கும்
கொடுங்கோலன் கூர்முனைகள்
நான் கடந்து செல்கிறேன்
என் இலக்கை யாரோ
நிர்ணயிக்க முற்படுகிறான்
மறுக்கிறேன்
பாதையினையேனும் வடிவமைக்க
பலவந்தப்படுத்துகிறான்
நான் அணியும் ஆடைகளை
தரமதிப்பு செய்யும் ஒருவன்
அடுத்தவர்களால் ஆமோதிக்கப்படுகிறான்
பயணம் தொடங்குகிறேன்
முதுகின் பின்னால்
பெயர் சொல்லி அழைக்கிறாள்
அம்மா
என் காதுகளில் விழவில்லை
நகரும் பேருந்து;
ஜன்னலோர இருக்கை
பயணிக்கும் மரங்களை
தொட்டுவிட எத்தனிக்கிறேன்
தோள் தட்டி யாரோ என்
கற்பனை கலைக்கிறான்
இரண்டே ரூபாய்க்காய்
**** ****
நான் இரவுகளை நேசிக்கிறேன்
இங்கே
ஊமத்தைகளும் குயில்களும்
குரலெழுப்புகின்றன; அவற்றின்
குரல்வளையை யாரும்
நசுக்குவதில்லை
மரங்களின் தலை கோதி – என்னை
தேடி வரும் தென்றலுக்குள்
விஷம் யாரும் கலப்பதில்லை
என் உள்ளாடைகளின் தரம்பற்றி
விவாதம் நடப்பதில்லை
ஆடையே அணியவில்லை- எனினும்
அவமானப்பட்டதில்லை
நினைவுகளின் தாக்கத்தால்
சிரிக்கின்றேன்!
யார் என்னை பைத்தியமென்பர்?
அழுகின்றேன்!
யார் வந்து காரணம் கேட்பார்?
நேற்றின் கனவுகளை
சத்தமாக அசைபோடுகிறேன்
அபத்தம் சொல்ல எவருண்டு?
**** ****
கறுப்பானவளென்று
கவலை கொள்ளாத
ஆதிக்க சூரியனுக்கு
அடிவருடாத
தூக்கத்தில் துன்பங்களை
தூண்டிவிடாத
நான் நானாக வாழ
மறுப்பு சொல்லாத
கருப்பிரவின் காதலன் நான்
-
என்ன தேடுகின்றாய்…
வண்ணத்துப் பூச்சியே நித்தமும் சுழன்று சுழன்று என்ன...
-
யாசகன்
மௌனத்துக்கு அனுமதியில்லை எனக்கும் அவளுக்குமான பயணங...