கல்முனை பிரதேச செயலக தரமுயர்வு விடயத்தில் வியாழேந்திரன் எம்மை ஏமாற்றிவிட்டார்!
In இலங்கை February 11, 2021 9:29 am GMT 0 Comments 1217 by : Vithushagan
கல்முனை பிரதேச செயலக தரமுயர்வு விடயத்தில் இராஜாங்க அமைச்சர் எம்மை ஏமாற்றிவிட்டார் என கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக்கோரி ஒண்ணாவிரதம் இருந்த ஐக்கிய வணிகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பகுதியில் இன்று(வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”எனது அரசியல் வாழ்க்கை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 2019 ஆண்டு ஆரம்பமாகியது.அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் போராடியுள்ளேன்.
அதன் பின்னர் தற்போதைய இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் நம்பிக்கை ஊட்டக்கூடிய வாக்குறுதிகளை என்னிடம் வழங்கியதை தொடர்ந்து அவரின் அரசியல்பால் ஈர்க்கப்பட்டு பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நேரடியாகவும் மேடைப்பேச்சு சமூகவலையமைப்பின் ஊடாகவும் பிரச்சாரங்களை அவரின் தேர்தல் வெற்றிக்காக மேற்கொண்டிருந்தேன்.
தற்போது இராஜாங்க அமைச்சருடன் கல்முனை பிரச்சினை தொடர்பாக எழுந்த விடயங்கள் தொடர்பில் நான் அவருடன் முரண்பட வேண்டி இருந்தது.எனக்கு வந்த அழுத்தங்களால் தான் தற்போது இராஜாங்க அமைச்சருடன் உள்ள சகல தொடர்புகளையும் துண்டித்து விலகியுள்ளேன்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகப்பிரச்சினை என்பது அம்பாறை மாவட்டத்திற்கோ அல்லது கல்முனைக்கு மாத்திரம் உள்ள பிரச்சினை அல்ல.அதை விடய அரச வேலைவாய்ப்புக்கள் வீதி அபிவிருத்தி திட்டங்கள் பாடசாலை வைத்தியசாலை உள்ளிட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக உள்ளவர் ஆளுங்கட்சியில் உள்ள இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள்.இதற்கமைய இராஜாங்க அமைச்சரிடம் பல்வேறு தேவைகள் கல்முனை வாழ் மக்களுக்கு இருப்பதாக அடிக்கடி தெரிவித்து வந்தேன்.
எனினும் அவர் அங்கு வருகை தராமல் கால இழுத்தடிப்பு மாத்திரமே இடம்பெற்றிருந்தது.இதனால் அமைச்சருடன் இருந்து விலக முடிவெடுத்தேன். அமைச்சருடன் இணைந்திருந்து எவ்வித நடவடிக்கையும் மக்களுக்கு செய்யவில்லை என்ற காரணத்தினால் எனது எதிர்கால அரசியல் செயற்பாட்டை முன்னிறுத்தி இந்நடவடிக்கையை மேற்கொண்டேன்.தவிர அமைச்சருடன் தனிப்பட்ட எவ்வித கோபதாபங்களும் இல்லை.கல்முனை பிரதேச செயலக விடயத்தில் அவரால் ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
கல்முனை பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது குறித்து அவரால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடகங்களில் வந்திருந்தன.அதாவது பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த தரமுயர்வு விடயங்களை சுட்டிக்காட்டியதுடன் அவ்வாறு இப்பிரதேச செயலகத்தையும் தரமுயர்த்தாவிடின் கிழக்கில் நிர்வாக முடக்கங்களை மேற்கொள்வதாக கூறி இருந்தார்.
இதனால் அந்த நேரம் உண்ணாவிரதத்தில் பங்கேற்ற உண்ணாவிரதி என்ற வகையில் அவரின் பால் ஈர்க்கப்பட்டு கடந்த ஜனாதிபதி தேர்தல் முதல் பல்வேறு செயற்பாடுகளை செய்திருந்தேன்.ஆனால் கல்முனை பிரதேச மக்களுக்கு இராஜாங்க அமைச்சரினால் கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரமுடியாது என்பதை விளங்கிக்கொள்ள ஆரம்பித்தனர்.
இது தான் உண்மையுமாகும்.எனது மனவருத்தம் என்னவெனில் கௌரவ அமைச்சர் நுவரெலியா செல்கின்றார் யாழ்ப்பாணம் போகின்றார் காலி செல்கின்றார் ஆனால் என்னால் அவரை மக்களின் கோரிக்கைக்கு அமைய கல்முனைக்கு அழைத்து செல்ல முடியாமல் இருந்தது.இதனால் விரக்தியடைந்து அதிருப்தியுடன் அவரின் சகல தொடர்புகளையும் துண்டித்து தற்போது விலகி உள்ளேன்.
கடந்த கால நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பேச்சாளனாக மட்டக்களப்பில் ராஜாங்க அமைச்சருடன் இணைந்து பணியாற்றி இருந்தேன்.தவிர அம்பாறை மாவட்டத்தில் சம காலத்தில் கருணா அம்மானுக்கு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தேன்.இவ்விடயமானது பிரச்சினை அல்ல.ஆனால் கறுப்பு சேட் போடுவதை நான் விரும்புவதில்லை.அதனால் எனது சொல்லை அவர்கள் கேட்பதில்லை.
தேர்தல் நேரம் கருணா அம்மானிற்கு ஆதரவாக செயற்பட்டதை அவர்களுக்கு தெரியும்.ஆனால் தற்போது என்மீது அதையும் குற்றச்சாட்டாக முன்வைக்கின்றனர்.இதனால் அவ்வமைப்பில் இருந்து விலகி வந்த எனக்கு மீண்டும் சேர்வதென்பது பகல் கனவு.கதம் கதம் முடிஞ்சது முடிஞ்சது தான்.இராஜாங்க அமைச்சரிடமோ அல்லது ஏனைய அரசியல்வாதிகளிடமோ நான் கூறுவது யாதெனின் கல்முனை பிரதேச செயலகம் உட்பட ஏனைய பிரச்சினை தொடர்பில் உங்களால் பெற்றுத்தர முடியுமான வாக்குறுதிகளை வழங்குங்கள்.
பின்னர் செய்யமுடியாது சாத்தியமில்லை என கூறி இலவு காத்த கிளி மாதிரி கல்முனை தமிழர்களை ஏமாற்ற வேண்டாம்.அத்துடன் எனது அரசியல் பயணமானது தொடரும் என்பதை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.