கல்வித் துறையின் தீர்மானங்களை எடுக்கவேண்டியவர்கள் அரசியல்வாதிகள் அல்லர் – ஜனாதிபதி
நாட்டின் கல்வித்துறை பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் அல்லர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன் கல்வித்துறை பற்றிய தீர்மானங்களை கல்வித்துறை சார்ந்த புத்திஜீவிகளும் கல்விமான்களும் மேற்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “பிள்ளைகள் எதிர்கால உலகினை வெற்றிகொள்ளத்தக்க வகையிலும் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலுமான தேசிய திட்டமொன்றினை விரைவில் நாட்டில் அமுல்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது.
இதனை கல்விமான்கள், புத்திஜீவிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் ஆகியோரின் பங்குபற்றலில் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இன்று பிள்ளைகளின் கல்வியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பிரபல பாடசாலைகளால் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படுத்தப்பட்டுள்ள போட்டித்தன்மை எமது நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு சிறந்ததல்ல. இந்நிலைமை பிள்ளைகளின் எதிர்கால நன்மை கருதி விரைவில் மாற்றப்பட வேண்டும்.
பிரபல பாடசாலைகள் மற்றும் சிறந்த பாடசாலைகள் போன்ற எண்ணக்கருக்களால் இன்று எமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளில் பாரியளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. முறையான கல்வித்திட்டத்தின் ஊடாக சகல பாடசாலைகளையும் சிறந்த பாடசாலைகளாக மாற்றி அனைத்து பிள்ளைகளுக்கும் சம கல்வி உரிமையை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டமொன்று விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும்.
அத்துடன், ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறையான கொள்கையொன்றின் உருவாக்கம் குறித்தும் விரைவில் கவனஞ்செலுத்தப்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.