களம் காணும் கமல்ஹாசன் களை எடுப்பாரா…? அரசியலில்
February 24, 2018 5:21 pm GMT
“இது முடிவல்ல தொடக்கம். இந்த அரங்கில் பேசும் நான், அங்கு வருவேன்… வந்தே தீருவேன்… உங்கள் சேவைதான் என் கடமையும்,வாழ்க்கையும். தொண்டரடிப் பொடியாக அங்கு வந்தே தீருவேன்” விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாளில் நடிகர் கமலகாசன் உதிர்த்த உணர்ச்சி பூர்வமான வசனங்களில் முக்கியமானது இது.
மனித குலமே உணர்ச்சிகளால் உந்தப்படும் குணாம்சத்தை கொண்டதே. உணர்ச்சி வசப்பட்டு செயல்களை ஆற்றுவதும் இயல்பாகிவிட்டது, அது தவறு இல்லை என்று கூட சொல்லாம். ஆனால் வசப்படும் உணர்வுகளின் அடிப்படையில் தவறான முடிவுகளை விரைந்து எடுப்பதுதான் தவறு.
“தவறித் தவறல் தவறல்ல தவறிவிட்டு தவறல்ல என்பதே தவறு” .இது புதுக் குறள்.
அண்மைக்காலமாக அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் வருகிறார்…பிற்பகல் செய்தியிலும் வருகிறார்…இரவு தலைப்புச் செய்தியிலும் கூட கமல்…அரசியலுக்கு வருகிறார்… எனச் செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன.
“கமல் அரசியலுக்கு வருவதன் விளைவுகள் என்ன”, “பரமக்குடிகாரார் அரசியலுக்கு வருவதில் என்ன தப்பு” போன்ற தலைப்புகளில் எல்லாம் விவாத அரங்குகளும் தாராளமாக இடம் பெற்றன. கமலகாசனின் ரசிகர்கள் வண்ணத் திரைகளில் அவரை காணாமல் தங்கள் மனத்திரைகளில் எதிர்பார்த்தார்கள்.
இத்தனை முஸ்த்தாய்ப்புகளுடன் தனது அரசியல் நுழைவை மக்கள் குடியரசின் தலைவராக விளங்கிய அப்துல் கலாம் பிறப்பிடத்தில் இருந்து தொடங்கி உள்ளார் பரமக்குடியில் பிறந்த கமல் எனப்படுகின்ற சீனிவாசன் கமல்காசன். ஸ்ரீ வைணவ ஐயங்கார் வம்சத்தை சேர்ந்த தமிழ்ப் பிராமண குடும்பம் இவரது என்கிறது பூர்வீகம்.
தமிழ்நாட்டில் மற்ற நகரங்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு ராமநாதபுரம், மாவட்டம் பரமக்குடி நகருக்கு உண்டு. இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு பல வீரர்களை அளித்த பரமக்குடி அதன் நீட்சியாக விடுதலை இந்தியாவிலும் மக்கள் நலனை மையப்படுத்தி அடிக்கடி போராட்டம் காணும் களமாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
இத்தகைய தனித்துவம் வாய்ந்த நகரில் பிறந்த கமலின் தந்தை டி. சீனிவாசன் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். சிறந்த குற்றவியல் சட்டத்தரணி என்பதால், கமலின் தந்தைக்கு பரமக்குடியில் தனி செல்வாக்கு இருந்தது.
கறுப்பிலும் காவி இருக்கிறது என்று சொன்னார். நான் நாத்திகன் என்று என்னைச் சொல்லிக் கொள்வதில்லை, மற்றவர்கள்தான் அப்படிச் சொல்கிறார்கள். என்னை நாத்திகன் என்று சொல்வதை நான் விரும்புவதில்லை. நான் அந்தப் பக்கமும் இல்ல,. இந்தப் பக்கமும் இல்லை என்று பலவற்றை சொன்னார் கமல்.
கமலகாசனின் சொல்லும் செயலும் பாஜகவுக்கு எதிரானது, ரஜனிக்குப் பின்னால் பாஜகவும் கமலின் அரசியலுக்குப் பின்னால் கம்யூனிஸ்ட்டுகளும் இருப்பதாக எல்லாம் பேசப்பட்டது, படுகிறது.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து தமிழக அரசியலில் அடையாளம் பதித்த எம்.ஜி.ஆர்-அவரின் நிழலில் வந்த ஜெயலலிதா இருவரும் கூட அரசியலுக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர்.
சினிமாவில் எம்.ஜி.ஆரை தீவிரமாக ரசித்தவர்கள் பெரும்பாலானோர் பின்னாளில் ”இரட்டை இலை” வாக்காளர் ஆனார்கள். அது வேறு காலகட்டம், வேறு அரசியல் சூழல்நிலை மட்டுமல்ல எம்.ஜி.ஆர் வெறுமனே சினிமாவில் இருந்து மட்டும் அரசியலுக்கு வரவில்லை.
சினிமாவுடன் சேர்த்தே அவருக்கு அண்ணா காலத்தில் இருந்து ஒரு திராவிட அரசியல் பின்னணியும் வரலாறும் இருந்தது.அவர் காலத்து சிவாஜி கணேசன் முதல் இன்று வரை எம்.ஜி.ஆர் காலக் கனவுடன் அரசியலுக்கு வருகிறார்கள் ஆனால் எவரும் குறியை எட்டுவதில்லை.
விஜயகாந்தின் தே.மு.தி.க கூட திமுக-, அதிமுகவுக்கு மாற்றாகத்தான் தோற்றுவிக்கப்பட்டது. விஜயகாந்தும் நடிகராக வலம் வந்து முதலமைச்சர் பதவிக்காக ஆசைப்பட்டுக் காத்திருப்பவர்தான். ஹிந்தி உட்பட எந்த மொழி இந்திய நடிகரும் எம்.ஜி.ஆர் போல அரசியலில் புகழ் பூக்கவில்லை. இந்த அடிப் படையில் எம்.ஜி.ஆரைப் போலவே அரசியலுக்கு வரத் துடிப்பவர்கள் கடைசிவரை நடிகராகவே இருந்துவிடுவது நடிகருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது என்பதே பொது நிலை.
இன்றைய நடிகர்களின் அரசியல் அறிவிப்புகளை வேடிக்கையாக மட்டுமே பார்க்க முடியும். கம்புக்கும் நோகாமல் பாம்புக்கும் நோகாமல் தமிழ்ச் சமுகத்தின் அன்றாடப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியாதவர்களால் அரசியல்வாதியாக பரிணமிக்க முடியாது.
கமல்ஹாசன் மட்டும் நேர்மையானவராக, தூய்மையானவராக இருந்தால் போதாது. அவரால் முன்னிலைப்படுத்தும் அவரின் ரசிகர் மன்றங்களைச் சேர்ந்த அனைவரும் நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும். இது சாத்தியமானால்,மட்டுமே கமலின் கனவு ஓரளவுக்கேனும் நிறைவேறும் எனலாம். கமலின் வருகையை ஒருவித நேர்மறையான எண்ணத்துடனேயே வரவேற்க முடியும்.
சினிமா பயணத்துக்கும் அரசியல் பயணத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை. இரண்டுமே மக்கள் தொடர்புதான். சினிமாவைவிட அரசியலில் பொறுப்பு அதிகம். சினிமாவில் இருந்த பெருமையைவிட அரசியலில் அதிகப் பெருமையும் இருப்பதாக நினைக்கிறேன் கட்சிக் கொடியில் உள்ள ஆறு கைகள் ஆறு மாநிலங்களைக் குறிக்கும்.
மக்கள்தான் நடுவில் உள்ள நட்சத்திரம். மக்களின் நீதியை மையமாக வைத்து தொடங்கிய கட்சி இது . பழைய நீதிக்கட்சி போன்ற பெரிய கட்சிகள் சொல்லி வைத்த கருத்துகளை வைத்து எதிர்காலத்தை நோக்கி நகருவோம். தேசியமும் திராவிடமும் தழுவியது எங்களது கட்சி.
கிராமம் இன்றி தேசியம் இல்லை. திராவிடம் நாடு தழுவியது என்பதைக் கொண்டுதான் எனது அரசியல் பயணத்தைத் தொடங்கினேன். திராவிடத்தையும் தேசியத்தையும் நாங்கள் இழக்கவில்லை. வலது சாரியா, இடது சாரியா என்கின்றனர். இரண்டும் இல்லை.
மய்யத்தில் இருக்கிறேன். சாதி, மத விளையாட்டுக்குள் போகமாட்டேன். எட்டுமுனை நட்சத்திரம் என்பது தென்னக மக்களைக் குறிக்கும். இணைந்த ஆறு கைகள் புதுச்சேரி உள்பட ஆறு தென் மாநிலங்களைக் குறிக்கும். இவை கட்சி தொடங்கிய மேடையில் உதிரப்பட்ட கமலின் கருத்துரைகள்.
கமல் அறிவித்த கட்சியின் பெயரும் எளிமை அற்றதாக இருப்பது அவருக்கான எதிர் மறையே. கட்சி, கழகம் என்பது போன்ற சொற்களையே கேட்டுப் பழகிப்போன மக்களுக்கு மய்யம் என்னும் சொல் புதியதாகவே இருக்கிறது.
திராவிட அரசியலின் பால் சலிப்படைந்துள்ள மக்களுக்கு ஓர் அரசியலற்ற அரசியலையே மாற்றாக அறிமுகப்படுத்தி உள்ளார் கமல். கமலின் கட்சி அறிவிப்பால் தமிழ்நாட்டு அரசியல் ஒரு கலங்கு களமாக, காட்சிப் பிழையாக மாறியிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.திமுக, அதிமுக இரண்டையும் நிராகரித்துவிட்டுத் தங்களை தமிழ்நாடு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது கமலின் கணக்கு.
கணக்கு பிழைக்குமா…? ஜெயிக்குமா…? எதையும் கணிக்க முடியாது எதுவும் நடக்கலாம் என்னும் இன்றைய சூழலில்.
நடப்பு அரசியலுக்கு மாற்றாக அரசியலற்ற அரசியலை முன்வைக்கும் போக்கு தமிழ்நாட்டில் வலுப்பெற்று வருவதற்கு திராவிடக் கட்சிகள் மட்டுமல்லாது, இடது, சாரிகளும் கூடவே பொறுப்பேற்க வேண்டும்.எல்லாவற்றையும் சமநிலையாக இணைத்துப் பார்க்கும் ஞானம் இன்றைய உலகில் அதிகரித்து வருகிறது.
ஞானம், அஞ்ஞானம் என்கிற இரண்டும் வெவ்வேறானவை. ஒன்றை இரண்டாகப் பார்ப்பது அஞ்ஞானம்,இரண்டையும் ஒன்றாக இணைத்துப் பார்ப்பது ஞானம்.
விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தை எடுத்துவிட்டேன். உங்களின் நிலையைப் பார்த்து கோபம் வந்ததால் எடுத்ததுதான் இந்த முடிவு. இனிமேல்தான் எடுக்க வேண்டும் அடுத்த விஸ்வரூபம் என்கின்ற கமலின் அரசியல் பின்னணியில் ஏகாதிபத்திய ஊடுருவல் உள்ளதா…? என்கின்ற நியாயமான கேள்வியும் எழுப்பப்படுகிறது.
கட்சிக் கொடியில் உள்ள இணைந்த ஆறு கைகளும் இந்தியாவின் ஆறு தென் மாநிலங்களை குறிக்கும் நன்கு உற்றுப் பார்த்தல் நடுவில் உள்ளவர்கள் மக்கள் என்பது புரியும் என்கிறார் கமல்.
இது இந்திய உடைதலுக்கான மறை முக அடித்தளமா…? வளர்ந்து வரும் இந்திய பொருளாதரத்தை தகர்க்க ஏகாதிபத்தியங்கள் முன்னெடுக்கும் சதிக்கு கமல் பலியாகிறாரா…? என்கின்ற கேள்விக்கு ஹோலிவூட்டின் ஊடாக கமலுக்கு இருக்கும் பரந்த அமெரிக்க தொடர்புகள் தான் பதில்.
ஊழலை எப்படி ஒழிப்பீர்கள்…? எனக் கேட்டதற்கு தனியாக ஓழிக்க முடியாது. தனிப்பட்டு ஒவ்வொருவரும் தியாகம் செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்தால், நாடு எங்கே போகிறது எனப்பாருங்கள். உங்கள் அளவில் ஊழல் இல்லாவிட்டால் ஊழல் ஒழிந்துவிடும் என்கின்றார். இந்திய அளவில் அரசை ஆளும் அதிகாரிகளும், அமைச்சர்களும் மட்டுமே.
மக்கள் எல்லாம் வெறும் மாக்கள் மட்டுமே என்பதையும் இந்த இரு தரப்பும் இருக்கும் வரை ஊழலும் லஞ்சமும் இருக்கும் என்பதையும் அரசியல் சதுரங்கத்தில் இறங்கியுள்ள கமல் கண்டு கொள்ள வேண்டும்.
ஆக களம் காணப்போகும் கமலகாசன் அரசியலில் களை எடுப்பாரா…? அல்லது களைத்துப் போய், சலித்துப் போய் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்து விடுவாரா…? என்பதை எல்லாம் பார்வையாளர்களாக இருந்து வேடிக்கைதான் இப்போதைக்கு பார்க்க முடியும்.
-அறமொழியன் –
-
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்
ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்...
-
அபிநந்தன் விடுதலையும்… அரசியல் சதுரங்கமும்…
-ஆண்டாள்- இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ...