காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க தமிழிசையை அனுப்பியுள்ளது மோடி அரசு : அழகிரி குற்றச்சாட்டு!
In இந்தியா February 19, 2021 3:00 am GMT 0 Comments 1198 by : Krushnamoorthy Dushanthini

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்காக தற்போது தெலுங்கானா ஆளுநர் தமிழிசையை, பிரதமர் நரேந்திர மோடி அனுப்பிவைத்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் முன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “புதுச்சேரியில் மக்களால் தேர்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசை செயல்படாமல் தடுக்க கிரண்பேடியை மோடி அனுப்பி இருந்தார். தற்போது காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க தமிழிசையை அனுப்பி உள்ளார்.
கிருஷ்ணரை கொல்ல பெண்களை பல்வேறு உருவங்களில்தான் அனுப்பினார்கள். எல்லா முயற்சிகளிலும் கிருஷ்ணர் தப்பித்தார். ஆனால் அந்த பெண்கள்தான் தப்பிக்க முடியாமல் போனார்கள். தமிழிசைக்கு என்ன நிகழ போகிறதோ தெரியவில்லை.
இது ஜனநாயகத்திற்கு புறம்பான செயல். கிரண்பேடி மீது என்ன குற்றத்தை மோடி கண்டுபிடித்தார். நான்கரை ஆண்டுகளாக காங்கிரஸ் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக் சொன்னபோது நடவடிக்கை எடுக்காமல் இப்போது நடவடிக்கை எடுக்க காரணம் என்ன?
இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது. 6 ஆண்டுக்காலத்தில் 20லட்சம் கோடி வரி விதித்து அரசுக்கு சேர்த்துள்ளனர். பிரதமர் மோடி பேசும் போது எரிசக்தியை சேமிக்காமல் உள்நாட்டில் உற்பத்தி எப்படி செய்ய தெரியாமல் இறக்குமதி செய்வதை நம்பி இருந்ததால் பின்னடைவு என்று சொல்லி உள்ளார். இது முற்றிலும் தவறானது.
தேர்தல் அறிவித்ததும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கும். திமுக கூட்டணியில் காங்கிரஸ்க்கு அதிக இடம் கேட்க இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.