காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளரிடம் விசாரணை!
In இலங்கை February 23, 2021 5:08 am GMT 0 Comments 1163 by : Vithushagan

வவுனியாவில் கடந்த 1465 நாட்களாக சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமாரிடம் பயங்கரவாத தடுப்புவிசாரணை பிரிவினர் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அவர்கள் தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக அமைந்துள்ள கொட்டகையில் குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
விசாரணையின் பின்னர் கருத்து தெரிவித்த அவர், “பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவை சேர்ந்த இரண்டு உத்தியோகத்தர்கள் என்னிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். நாம் மேற்கொண்டுவரும் உணவுதவிர்ப்பு போராட்டம் தொடர்பாக அவர்கள் கேட்டறிந்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி அமெரிக்க,ஐரோப்பிய ஒன்றிய கொடிகளுடன் வவுனியா நகரசபை மண்டபத்தில் இருந்து நடைப்பயணமாக வந்தீர்களா என கேட்டிருந்தனர். பலவருடங்களாக போராடிவரும் நிலையில் எமக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையில் இலங்கை அரசுமீது நம்பிக்கை இழந்துள்ளநாம் எமக்கான நீதியை பெறுவதற்கு சர்வதேசத்தின் உதவியைநாடியுள்ளதாக அவர்களிடம் தெரிவித்திருந்தேன்.
போராட்டங்களிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதி வருகின்றதா என அவர்கள் கேட்டிருந்தனர். நாங்கள் நீதியை மாத்திரமே எதிர்பார்த்து நிற்கின்றோம் நிதியை அல்ல என்ற விடயத்தினை அவர்களிற்கு உறுதியாக கூறியிருந்தேன்.
அமெரிக்க தூதுவர் நாளையதினம் யாழ்பாணம்வரவுள்ள நிலையில் குறித்த விசாரணை முன்னெடுக்கப்படுகின்றமை சந்தேகத்தை ஏற்ப்படுத்துவதாக தெரிவித்த அவர் அரசு இவ்வாறான அச்சுறுத்தல்களை முன்னெடுத்தாலும் எமது உறவுகளிற்கான போராட்டங்களில் இருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.
அவரைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவி க.ஜெயவனிதாவிடமும் சிலவிடயங்கள் தொடர்பாக அவர்கள் கேட்டிருந்தனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.