காணி அளவீடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்!
In ஆசிரியர் தெரிவு April 8, 2019 8:58 am GMT 0 Comments 2370 by : Benitlas
யாழ்.மாவட்டத்தில் கடற்படை கோரும் பொதுமக்களின் காணிகள் தொடர்பாக ஆராய்ந்து உரிய பதில் வழங்கப்படும் வரையில் காணி அளவீடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தமக்கு காணிகள் வேண்டும் என கடற்படையினர் கோரி வருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி விடயம் குறித்து இன்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது.
இதன்போது கடற்படை மற்றும் பொலிஸார் உட்பட காணிகளுடன் சம்மந்தப்பட்ட சகல தரப்பினருடனும் ஆராய்ந்தே தீர்மானம் எடுக்கப்படவேண்டும். அதுவரையில் காணிகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது. குறிப்பாக சுவீகரிப்புக்கான அளவீடுகள் எதனையும் மேற்கொள்ளகூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.