காணி சுவீகரிப்புக்கு எதிராக அணிதிரளுமாறு கஜதீபன் அழைப்பு!
In ஆசிரியர் தெரிவு January 17, 2021 12:00 pm GMT 0 Comments 1714 by : Litharsan

யாழ்ப்பாணத்தில் மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் கடற்படையினரின் முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிப்பினை முறியடிக்க அனைவரும் அணிதிரளுமாறு வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, யாழ். ஏழாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடக சந்திப்பை மேற்கொண்ட அவர், இவ்வாறு அழைப்பை விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், “முப்படையினரின் தேவைகளுக்காகத் தொடர்ச்சியாக எமது மக்களின் சொந்தக் காணிகள் தொடர்ச்சியாக சுவீகரிக்கப்படுகின்ற நிலைமை நீடிக்கின்றது.
கடந்த காலங்களிலும் மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்காக அளவீடு செய்ய முற்பட்டபோது மக்களின் எதிர்ப்பினால் அந்த நடவடிக்கைகள் கைவிடப்பட்டிருந்தன. எனினும், அதன் தொடர்ச்சியாக மண்டைதீவு மற்றும் மண்கும்பான் பகுதிகளில் மக்களுடைய காணிகள் கடற்படையின் முகாம் அமைப்பதற்காக சுவீகரிப்பு செய்வதற்காக அளவீடு செய்யப்படவுள்ளது.
நாளை திங்கட்கிழமை மண்டைதீவிலும், மறுதினம் செவ்வாய்க்கிழமை மண்கும்பானிலும் அளவீடு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே, எமது மக்களின் காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக நாளை காலை 8.30 மணிக்கு மண்டைதீவிலும் நாளை மறுதினம் காலை 8.30 மணிக்கு மண்கும்பானிலும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் அணிதிரண்டு காணி சுவீகரிப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என கஜதீபன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.