காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது!
In இந்தியா December 1, 2020 2:36 am GMT 0 Comments 1782 by : Krushnamoorthy Dushanthini

இலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறது. குறித்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், “ வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாகவும் பின் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற்றது.
இது தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் காரைக்காலுக்கு தென் கிழக்கே 975 கி.மீ. துாரத்தில் நிலை கொண்டு உள்ளது. இது இன்று காலை புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நாளை மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரும்.
இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.
மற்ற மாவட்டங்கள் புதுச்சேரி, காரைக்கால் நகரங்களில், ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென்காசி ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், நாளை ஓரிரு இடங்களில் அதி கன மழை பெய்யும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.