காஸ்மீர் தாக்குதலும் ஹராம் அகற்றப்பட்ட பயங்கரவாதிகளும் .
February 24, 2019 11:46 am GMT

இந்திய பாகிஸ்தான் எல்லையில் இரண்டு நாடுகளினதும் அரசியல் சதுரங்கத்தில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் இந்தியாவின் காஷ்மீர் மாநிலம்.
புல்வாமா மாவட்டத்தில் வாகனங்களில் சென்றுகொண்டிருந்த இந்திய காவல் துறையின் மத்திய துணைக் காவல் படையின் அணி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் 44 வீரர்கள் உயிரிழந்த கொடூரம் தேர்தலை எதிர்கொள்ள தயார்கிவரும் இந்திய அரசியல் கட்சிகளை மட்டுமல்ல நாட்டு மக்களையும் உலுக்கி உள்ளது.
கடந்த 14-ம் தேதி மாலை 3 மணியளவில் நடாத்தபட்ட இந்தத் தாக்குதல் கடந்த 30 ஆண்டுகளில் இடம்பெறாத ஒரு கொடுரம்.
பாகிஸ்தானைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது என்கிற பயங்கரவாதக் குழு இந்த தாக்குதலுக்கான உரிமையை கோரி உள்ளது. இதுவரை நடந்தத் தாக்குதல்களிலேயே மிக அதிகமான வீரர்களின் உயிர் இழப்பிற்கு காரணமான இந்தத் தாக்குதல் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய நிகழ்வு அல்ல.
2017-இல் அமர்நாத் யாத்ரிகர்கள் மீது தாக்குதல் நட்டத்தபட்ட ஜம்முவிலிருந்து ஸ்ரீநகருக்குப் போவதற்கான நெடுஞ்சாலையிலேயே இந்த தாக்குதலும் இடம்பெற்றுள்ளது. சாதாரணமாக அதிகமான ராணுவ வீரர்களை கொண்ட வாகனங்கள் இந்த நெடுஞ்சாலை வழியாக பயணிப்பது இல்லை எனவும் அபோது அங்கே பெரும் பனிப்பொழிவு காணப்பட்டதால் இந்த நெடுஞ்சாலை பயன்படுத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டிருப்பதைத்தான் இந்தத் தாக்குதல் வெளிச்சம் போடுகிறது. நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாசல்களில் எல்லாம் பாதுகாப்பு இருந்தும்கூட எப்படி மனித வெடிகுண்டாகச் செயல்பட்ட அடில் அகமதால் அந்த வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை வரிசையில் ஐந்தாவதாகச் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனத்தின் மீது மோதித் தாக்குதல் நடத்த முடிந்தது என்பது புதிராகவே இருக்கிறது.
பொதுவாக முஸ்லிம்கள் மத்தியில் தற்கொலை செய்து கொள்வது(ஹாராம்) தடை செய்யப்பட்டது என்று கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் காஷ்மீர் பயங்கரவாதிகள் இதுவரை இதுபோலத் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டதில்லை. மேற்கு ஆசியாவில் தற்போது இஸ்லாமைப் பாதுகாப்பதற்காக நடத்தப்படும் புனிதப் போரில் உயிரை மாய்த்துக் கொள்வது ஹராம் அல்ல என்கிற புதிய கருத்து உருவாகியது.
அது சிரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பரவி இப்போது இந்தியாவிற்குள்ளும் நுழைந்து விட்டிருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் அடில் அகமது என்கிற மனித வெடிகுண்டு தெரிவிக்கும் செய்தி.
2001ம் ஆண்டு ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவை மீதான வாகனத் தாக்குதல், பதான்கோட், நக்ரோட்டா தாக்குதல்கள் அனைத்துமே பாகிஸ்தானிய அமைபுகளினால்தான் நடத்தப்பட்டன. இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு உள்ளூர் காஷ்மீரிகளையே பயன்படுத்தி உள்ளது.
இஸ்லாமிய தீவிரவாதிகளின் இந்த யுக்தி வருங்காலத்தில் இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கு மட்டுமல்ல இந்திய இறைமைக்கே மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது.
ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியிருக்கிற நிலையில் இதற்கு அமெரிக்காவுக்குப் பாகிஸ்தானின் உதவி தேவைப்படுகிறது எனவும் இதனால் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளிப்பதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையில் ஈடுபட இந்தியாவை அமெரிக்கா அனுமதிக்குமா? என்கின்ற சந்தேகமும் எழுப்பப் படுகிறது.
அமரிக்காவுடன் மிக நெருக்கமாக ஒட்டி உறவாடிக் கொண்டு அதேவேளை தனது தேசபக்தியின் அளவு மற்றவர்களைவிட 200 சதவீதம் அதிகம் என அடிகடி பீற்றிக் கொள்ளும் இந்திய பிரதமர் மோடி இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பாரா…? என்கின்ற சந்தேகமும் வலுவாக எழுப்பப் படுகிறது.
புல்வாமா தாக்குதல் நடந்து நாடே அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்த நிலையில் நாட்டின் பிரதமர் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார் என்கின்ற மோடியின் தேசபக்தியின் இலட்சணத்தை ஆதாரங்களுடன் சொல்லியிருக்கிறது காங்கிரஸ் கட்சி.
புல்வாமா தாக்குதல் சம்பவ செய்தி வெளிவந்த பின்னர்தான் மோடி உத்தரகாண்டில் உள்ள கார்பெட் தேசிய பூங்காவில் தேர்தல் பிரச்சார படப்பிடிப்பில் இருந்தார் என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் “கொல்லப்பட்ட இராணுவ வீரர்களைக் காட்டிலும் மோடிக்கு பதவியின் மீதே பேராசை இருக்கிறது” என கடுமையாக சாடினார் .
நாட்டின் சூழல் பதற்றமான நிலையில் இருக்கும் இந்த நிலையிலும்கூட தென் கொரிய பயணத்தில் இருக்கும் மோடி இந்தத் தாக்குதலை வாக்குகள் ஆக்கும் நினைப்பில் இருக்க, கொல்லப் பட்டவர்களின் குடும்பம் அல்லலில் அலைகிறது இதுதான் இன்றைய மோடியின் இந்திய அவலம்.
– ஆண்டாள்
-
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்
ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்...
-
அபிநந்தன் விடுதலையும்… அரசியல் சதுரங்கமும்…
-ஆண்டாள்- இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ...