கிராம மக்களின் முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்- பசில் ராஜபக்ஷ
In ஆசிரியர் தெரிவு November 29, 2020 2:52 am GMT 0 Comments 1462 by : Yuganthini

வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்தும்போது கிராமிய குழுக்களினால் முன்வைக்கப்படும் அபிவிருத்தி முன்மொழிவுகளுக்கு முன்னுரிமை வழங்கி மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த வேண்டும் என பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக பசில் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “இம்முறை மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், கிராமத்திலுள்ள சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிற அமைப்புகளின் பங்களிப்புடன், கிராமிய குழுக்களுக்கு முன்வைக்கப்படும் கிராம மக்களின் முன்மொழிவுகளை மேலும் முறையாக ஆய்வு செய்து, அதனை முன்னுரிமை அளிப்பதனையே நாம் எதிர்பார்க்கிறோம்.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய உற்பத்தி துறையின் வளர்ச்சிக்கு மேலும் ரூபாய் 2 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மகளிர் தொழில்முனைவோரை உருவாக்கி அவர்களது உற்பத்திகளை விநியோகிப்பதற்கு கிராமிய மட்டத்தில் விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்படும்.
அனைத்து கிராமங்களுக்கும் சென்று கிராம மக்களின் கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர்களின் பங்கேற்புடன் ‘வேலைத்திட்டத்துடன் மீண்டும் கிராமத்திற்கு’ செயல்திட்டத்தை செயற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இந்த வரவு செலவுத் திட்டம் உண்மையான இலங்கையின் அடையாளம், கலாசாரம் மற்றும் உள்ளூர் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட வரவு செலவுத் திட்டம். அதற்கு மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் தலையிடுமாறு அரச அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கிறேன்.
ஒவ்வொரு அமைச்சுக்களுக்கிடையேயும் முறைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதேபோன்று கிராம மட்டத்திலும் பல்வேறு கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் ஏற்படக்கூடும். அதனால் கிராமத்தின் பிரதான குழுக்கள் ஊடாக முன்னுரிமையளித்து, பிரதேச அபிவிருத்தி குழுக்களில் அங்கீகரித்து வரவு செலவுத் திட்டத்தை செயற்படுத்த வேண்டும். இதன் மூலம் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை இன்னும் திறம்பட மேற்கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.