கிரிக்கெட்டில் தொடர்ந்தும் வளர வேண்டுமென்பதே எனது நோக்கம்: சேம் கர்ரன்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் புகழ் மிக்க வீரராக உருவாகியுள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சகலதுறை வீரர் சேம் கர்ரன், கிரிக்கெட்டில் தொடர்ந்தும் வளர வேண்டுமென்பதே தனது நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
இத்தொடரில் முதல் முறையாக விளையாடும் அனுபவம் குறித்து அவரிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
”மிகப்பெரிய இரசிகர்கள் கூட்டத்திற்கிடையில் விளையாட கற்றுக் கொள்வது முக்கியமானது. மாறுபட்ட இடத்தில் மாறுபட்ட நிலையில் ஆடுகளங்கள் இருக்கின்றன. இந்தியாவில் நான் விளையாடுவது இது முதல் முறை. ஆகவே வெயிலின் தாக்கம் மிகவும் சவாலாக உள்ளது. சில விடயங்களை தலைசிறந்த வீரர்களிடம் இருந்து எடுத்துக் கொள்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இங்கிலாந்து தொடருக்கு சில விடயங்களை எடுத்துச் செல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இரசிகர்கள் கூட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கிறது. இந்த தொடரில் விளையாட வரும்போது சில விடயங்களை எதிர்பார்த்து வந்தேன். கடந்த போட்டியில், ஆட்ட நாயகன் விருது பெற்றதில் மகிழ்ச்சி ஆனால், கற்றுக் கொண்டு, கிரிக்கெட்டில் தொடர்ந்து வளர வேண்டும் என்பது என் நோக்கம்” என கூறினார்.
நடப்பு ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் அறிமுகமான சேம் கர்ரன், நான்கு ஓவர்கள் வீசி 52 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுக்ளை வீழ்த்தினார். இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றாலும் அடுத்த இரண்டு போட்டியில சேம் கர்ரன், நீக்கப்பட்டார்.
இதனையடுத்து, கடந்த டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில், கிறிஸ் கெய்லுக்குப் பதிலாக களம் இறக்கப்பட்ட சேம் கர்ரன், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 10 பந்தில் 20 ஓட்டங்களை அடித்தார். அத்துடன் 2.2 ஓவரில் 11 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஹெட்ரிக் உடன் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
வெறும் இரண்டு போட்டிகளில் விளையாடி, பெரும் எதிர்பார்புக்குரிய வீரராக சேம் கர்ரன் தற்போது மாறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.