கிளிநொச்சியில் முதியவருக்கு கொரோனா – குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகிப்பவர்கள் காரணமா?

கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட வயோதிபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு குடிதண்ணீர் போத்தல்கள் விநியோகத்தில் ஈடுபடும் பணியாளர்கள் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்படும் மேல் மாகாணத்துக்குச் சென்று குடிதண்ணீர் போத்தல்களை எடுத்து வந்து கிளிநொச்சி மாவட்டத்தில் விநியோகிக்கும் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்தோருக்கு பிசிஆர் பரிசோதனையை முன்னெடுக்க சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்போது தென்னிலங்கையில் இருக்கும் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களை கிளிநொச்சிக்குத் திரும்புமாறு சுகாதாரத் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர்களை தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனை நடத்தவும் சுகாதாரத் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த “கிளிநொச்சி 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முதியவர் ஒருவர் காய்ச்சல் என்று வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவருக்கு கோரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை பிசிஆர் பரிசோதனையில் கடந்த திங்கட்கிழமை மாலை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது கடையில் பாரவூர்திகள் மற்றும் டிப்பர் வாகனங்களின் சாரதிகள், உதவியாளர்கள் ஒயில் வாங்குவதற்கு வந்து செல்கின்றனர். அவர்களில் ஒருவரால் வயோதிபருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.
இந்த நிலையில் குடிதண்ணீர் போத்தல்களை மேல் மாகாணத்திலிருந்து எடுத்து வந்து கிளிநொச்சியில் விநியோகிக்கும் அந்த மாவட்டத்தில் வசிக்கும் இருவர் தொடர்பில் சுகாதாரத் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் முதியவரின் கடைக்கு வந்து செல்வதால் அவர்களை தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனையை நடத்த சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.