கிழக்கில் 6 பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக பிரகடனம்
In ஆசிரியர் தெரிவு January 8, 2021 8:06 am GMT 0 Comments 1678 by : Yuganthini

கிழக்கில் 6 பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு- திருகோணமலைநகர், காத்தான்குடி, அட்டாளைச்சேனை, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகண ஆகிய 6 சுகாதார பிரிவுகள் சிவப்பு வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அ.லதாகரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது “பேலியகொடை மீன் சந்தைக்கு பின்னர் கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மூலம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 58 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் மூதூர் பிரதேசத்தில் 5 பேரும் தம்பலகாமத்தில் ஒருவரும் திருகோணமலையில் 4 பேரும் கல்முனை தெற்கில் 8 பேரும் சாய்ந்தமருதில் ஒருவரும் நிந்தவூரில் 5 பேரும் ஏறாவூர் பிரதேசத்தில் 3 பேரும் மட்டக்களப்பு நகரத்தில் ஒருவரும் காத்தான்குடியில் 20 பேருக்கும் வெல்லாவெளி பிரதேசத்தில் ஒருவருக்கும் அம்பாறையில் இருவருக்கும் உகண பிரதேசத்தில் 7 பேர் உட்பட 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை அம்பாறை உகண பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர் தொற்றுள்ளவராக அடையாளம் காணப்பட்டு சிறுநீரக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதையடுத்து கிழக்கில் உயிரிழந்தோர் 9 ஆக அதிகரித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் கல்முனை நகரப்பகுதியில் சில கிராமசேவகர் பிரிவும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவும் திருகோணமலை நகர் ஆகிய 3 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் கிழக்கில் 6 பிரதேசங்கள் கொரோனா சிவப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. விசேடமாக இந்த பகுதியிலுள்ள மக்கள், சுகாதார துறைக்கும் மற்றும் கொரோனா சம்மந்தமாக செயற்படுகின்ற அனைத்து தரப்பினருக்கும் ஓத்துழைப்பை பூரணமாக வழங்கும் பட்சத்தில் மட்டும்தான் இந்த தனிமைப்படுத்தலை மிக விரைவில் நீக்கமுடியும்.
கிழக்கில் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. எனவே தொடர்ச்சியாக மக்கள் சுகாதார அமைச்சின் சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.