கிழக்கு மாகாண காணி ஆணைக்குழுவின் பணிப்பாளரை அச்சுறுத்தியவருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை
In இலங்கை November 20, 2020 3:55 am GMT 0 Comments 1702 by : Yuganthini

கிழக்கு மாகாண காணி ஆணைக்குழுவின் பணிப்பாளரை அச்சுறுத்திய சந்தேகநபரை, ஒரு இலட்சம் ரூபாய் ஆள் சரீரப்பிணையில் விடுவித்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம், எதிர்வரும் ஜனவரி 21 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த சந்தேகநபரை, நேற்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.ஏ.றிஸ்வான் முன்னிலையில் பொலிஸார் முன்னிலைப்படுத்தியபோதே, அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திலுள்ள கிழக்கு மாகாண காணி ஆணைக்குழுவின் பணிப்பாளரை அச்சுறுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காரியாலயத்திற்கு மட்டக்களப்பு செபஸ்தியார் வீதியைச் சேர்ந்த ஒருவர் சம்பவதினமான நேற்று முன்தினம் (புதன்கிழமை) சென்று, காணி ஆணைக்குழுவின் பணிப்பாளரை சந்திக்க வேண்டும் என காரியாலயத்தின் வரவேற்று பீட உத்தியோகத்தரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து பணிப்பாளரை அணுகி சந்திப்பதற்கு ஒருவர் வந்துள்ளதாக தெரிவித்தார். அதற்கு பணிப்பாளர், பொதுமக்களை சந்திக்கும் தினமான திங்கட்கிழமை அன்று வருமாறு கூறி, இன்று சந்திக்க முடியாது என தெரிவித்தார்.
அதன்பின்னர் குறித்த நபர் பணிப்பாளர் தன்னை வரச் சொன்னதாக தெரிவித்து, தகவலை பணிப்பாளருக்கு தெரியப்படுத்தினார். அதற்கு பணிப்பாளர் நான் யாரையும் வரச் சொல்லவில்லை என்ற நிலையில் குறித்த நபர் பணிப்பாளரின் காரியாலய அறைக்குள் உள்நுழைந்து, களுவங்கேணியிலுள்ள காணி பிரச்சினை தொடர்பாக கதைக்கவேண்டும் என்றுள்ளார்.
இதன்போது, பணிப்பாளர் அந்த காணி தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டு, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும் அதில் தான் ஒன்றும் செய்யமுடியாது என தெரிவித்துள்ளார்.
அதற்கு குறித்த நபர், அந்த காணி தொடர்பான விடயத்தில் விலகி இருக்குமாறும் ஏற்கனவே உங்களை யார் சுட்டது என்பது தொடர்பான சி.ஐ.டி.யினரின் அறிக்கை தன்னிடம் இருப்பதாக அச்சுறுத்தும் தொனியில் தெரிவித்ததாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்
இதனையடுத்து பணிப்பாளரை அச்சுறுத்திய குறித்த நபரை நேற்று முன்தினம் மாலை பொலிஸார் கைது செய்து, நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.