கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும் – மஹிந்த உறுதிமொழி!

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் பராமரிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன கலுதரகே இதுகுறித்த தகவலினை வெளியிட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தொழிற்சங்க கூட்டு மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய அமைச்சரவை பத்திரத்தை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன கலுதரகே,
“குறித்த அமைச்சரவை பத்திரம் தொடர்பான அறிவிப்பு நாளைய தினம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம். பிரதமர் எமக்கு வழங்கிய உறுதிமொழி நாளைய தினம் நிறைவேற்றப்படும் என நம்புகின்றோம்.
குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரையில் நாம் தொழிற்சங்க போராட்டத்தை கைவிடப்போவதில்லை. நாளைய தினம் உத்தியோகபூர்வ அறிவிப்பு வௌியான பின்னர் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்படும்.
குறித்த அமைச்சரவை தீர்மானத்தில் வேறு விடயங்கள் இருந்தால் எமது தொழிற்சங்க போராட்டத்தை கைவிடமாட்டோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.