குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணைகள் சீ.ஐ.டியிடம் ஒப்படைப்பு
In இலங்கை April 21, 2019 3:22 pm GMT 0 Comments 1703 by : adminsrilanka

நாட்டின் நடைபெற்ற குண்டு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்துள்ளர்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அவர், கொழும்பு பிரதேசத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் குறித்த விசாரணைகளை ஆரம்பித்த கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, தெமட்டகொடை மேம்பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள மஹவில பகுதியிலுள்ள வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டனர்.
இதன்போது சந்தேகத்திற்கிடமான வீட்டை சோதனையிட சென்ற போது திடீரென வீட்டுக்குள் வெடிப்புச் சம்பவம் நடந்துள்ளதுடன் அதில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரம், மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் காயமடைந்துள்ளார். நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதால், அத்தியவசிய கடமைகளுக்கு செல்லும் நபர்கள் தமது தொழில் ரீதியான அடையாள அட்டைகளை பயன்படுத்தி தேவையான பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், விமான நிலையத்தில் பணியாற்றுவோர் தமது நிறுவனத்தின் அடையாள அட்டையை காண்பித்து செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை அடுத்து பொலிஸாரின் விடுமுறைகளை இரத்துச் செய்ய பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.