குருந்தூர் மலைக்கு சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்திய இராணுவத்தினர்!
In ஆசிரியர் தெரிவு January 27, 2021 11:24 am GMT 0 Comments 1775 by : Yuganthini
முல்லைத்தீவு- தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வு பணிகள் இடம்பெறும் இடத்துக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரே இந்த விஜயத்தை மேற்கொண்டனர்.
குறித்த பகுதிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரை அங்கு காவலில் நின்ற இராணுவத்தினர் உள்ளே செல்லவிடாது தடுத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமது மேலதிகாரியின் உத்தரவுப்படி யாரும் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என இராணுவ முகாமின் இராணுவ மேலதிகாரி பணித்துள்ளதாக தெரிவித்து இவ்வாறு தடை விதித்தனர்.
இதனையடுத்து அவ்விடத்திலிருந்து தொலைபேசி வாயிலாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை அழைத்த நாடாளுமன்ற உறுப்பினர், விடயம் குறித்து தெரியப்படுத்தியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகமும் தொலைபேசியூடாக சார்ள்ஸ் நிர்மலநாதனுடன் கலந்துரையாடியதன் பின்னர் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் பங்குபற்றலுடன் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்களும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.