குற்றங்களைத் தடுக்க வழிகோலுமா மரண தண்டனை?
In சிறப்புக் கட்டுரைகள் July 13, 2018 4:09 am GMT 0 Comments 4112 by : Arun Arokianathan
இலங்கையில் மரண தண்டனையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் வாதப் பிரதிவாதங்களை கிளப்பிவிட்டுள்ள நிலையில் அதனால் நாட்டு மக்களுக்கு நன்மை கிட்டுமா அன்றேல் நலிவடைந்த சமூகமே தொடர்ந்தும் பாதிக்கப்படுமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மரணதண்டனைத் தீர்ப்பில் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து வரும் பலர் போதைப் பொருள் வர்த்தகத்திலீடுபட்டிருப்பது அரசுக்கு பெரும் சவாலாக அமைந்திருப்பதாகவும், இதன் காரணமாக நாடு பாரிய நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டி இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாறு சிறையிலிருந்து கொண்டே நாட்டை அழிக்கும் முயற்சியிலீடுபட்டிருப்போரை தூக்கிலிடுவதற்கான ஆவணத்தில் கையெழுத்திடப் போவதாக அறிவித்திருக்கிறார். அண்மைக் காலத்தில் போதைப் பொருள் பாவனைக்கு இளம் சந்ததியினர் அடிமையாகி வருவது பாரிய நெருக்கடி நிலையை தோற்றுவித்திருக்கின்றது. இதன் காரணமாகவே இவ்வாறானதொரு முடிவு அவசரமாக எடுக்கப்பட்டிருக்கின்றது.
நாட்டையும் எதிர்கால சந்ததியையும் பாதுகாப்பதற்கு தீர்க்கமான முடிவொன்றுக்கு ஜனாதிபதி வந்துள்ளார். இந்த அடிப்படையில் முதற்கட்டமாக 19 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் முடிவை அமைச்சரவை எடுத்திருக்கின்றது. அது தொடர்பான ஆவணக் கோப்புகள் நீதியமைச்சிடம் கோரப்பட்டுள்ளன. மரண தண்டனை தொடர்பில் எமது நாட்டில் எதிரும்புதிருமான கருத்துக்கள் நிலவுகின்றன.
1976 இற்குப் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1977இல் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடமேறியதும் மகா சங்கத்தினரின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன மரண தண்டனைக்குரிய ஆவணத்தில் கையெழுத்திடுவதை தவிர்த்துக் கொண்டார். அன்று முதல் இன்றுவரையில் எந்தவொரு ஜனாதிபதியும் மரணதண்டனை ஆவணத்தில் கையெழுத்திடவில்லை. இதன் காரணமாக குற்றவாளிகள் பலருக்கு நீதிமன்றங்கள் மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கியுள்ளபோதும் அவர்களுக்கு அத்தண்டனை நிறைவேற்றப்படவில்லை.
நாட்டின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்த வண்ணம் காணப்படுகின்றது. ஊழல், மோசடி, போதைப் பொருள் பாவனை, விற்பனை, பாலியல் துஷ்பிரயோகம், களவு, கொலை கொள்ளை என மோசமான வன்முறைகள் இடம்பெறுகின்றன. இதனைச் சுட்டிக்காட்டி பிரமுகர்களும் பல்வேறுபட்ட அமைப்புகளும் மரணதண்டனையை மீண்டும் அமுலாக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. இதன் காரணமாக அரசு எடுத்த முடிவுக்கமைய மீண்டும் மரணதண்டனை அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கான தீர்மானம் கடந்தவார அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட ‘தயட்ட கிருள’ கண்காட்சியின்போது தூக்குமேடை மிகப் பிரபல்யம் கொண்டதாகக் காணப்பட்டது. நாட்டின் அவலநிலையை உணர்ந்த பொதுமக்கள் வரிசையில் நின்று மரணதண்டனையை நிறைவேற்றக் கோரும் மகஜரில் கையெழுத்திட்டதை நினைவூட்டிப் பார்க்க வேண்டியுள்ளது. என்றாலும் அன்றைய அரசு இது விடயத்தில் மௌனப் போக்கையே கடைப்பிடித்தது.
குற்றச் செயல்களை குறைக்க பல்வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை குறைந்தபாடாகக் காணப்படவில்லை. ஊழல், மோசடிகள், குற்றச் செயல்கள், போதைவஸ்து கலாசாரம் அதிகரித்தவாறே உள்ளது. பொலிஸ்துறையும், ஏனைய பாதுகாப்புத்துறைகளும் என்னதான் நடவடிக்கை எடுத்த போதிலும் குற்றச்செயல்கள் தணியவில்லை. அரசியல்வாதிகள் இது விடயத்தில் ஆர்வம் காட்டவே இல்லை. 41 வருடங்களில் நாட்டின் நிலை கவலையளிக்கக் கூடியதாக மாற்றம் பெற்றுள்ளது. இதன் விளைவாக நீதித்துறை கூட கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. மரண தண்டனைத் தீர்ப்பு போலித்தனமானது என்ற விமர்சனமும் காணப்பட்டது.
குற்றச் செயல்களையும், போதைப் பொருள் பாவனையையும் ஒழிப்பதற்கு சட்டத்தின் இறுதி முடிவுக்கு வந்தேயாகவேண்டிய நிலை இன்று உருவாகியுள்ளது. மத, கலாசார விழுமியங்கள் போதனையோடு மட்டுப்படுத்தப்படுமானால் மக்களை எவ்வாறு தான் நல்வழிப்படுத்த முடியும்?
ஆனால் மோசமான குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு மரண தண்டனை உரிய வழியாக முடியுமா? என்ற கேள்வியொன்றும் எழுப்பப்படவே செய்கின்றது.
போதைப் பொருள் வர்த்தகத்திலீடுபடும் பாதாள உலகக் கும்பலின் வலைக்குள் எமது எதிர்காலச் சந்ததியை சிக்குவதற்கு இடமளிக்க முடியுமா? இளம் சந்ததியினரின் உயிர்களோடு விளையாடுவதற்கு வாய்ப்பளிப்பதா அல்லது நாட்டையும் எதிர்காலச சந்ததியையும் பாதுகாப்பதா? என்ற கேள்வியே எம்முன் காணப்படுகின்றது.
இன்னொரு விடயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பாதாள உலகின் பின்னணியில் அரசியல் சக்திகளும் மறைந்திருப்பதை நாம் மறந்துவிட முடியாது. படுமோசமான குற்றவாளிகளில் பலர் பெரும் அரசியல் புள்ளிகளின் தயவில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றனர்.
மரண தண்டனை தான் இப்பிரச்சினைக்கு தீர்வு என்று நாம் கூற முடியாது. ஆனால் ஆயுட்காலச் சிறைத்தண்டனை பெற்றவர்கள் கூட இன்று சிறைகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். போதைப் பொருள் சிறைக்கூடங்களில் தாராளமாகவே கிடைக்கும் ஒரு அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுப்பதற்கு சிறை உயர் அதிகாரிகளால் கூட முடியவில்லை.
மரண தண்டனைக்கு அடிப்படையாக அமையப்பெற்ற குற்றவியல் சட்டக்கோவை உலக நாடுகள் பலவற்றில் வழக்கொழிந்து போயுள்ளது. எமது நாட்டு குற்றவியல் சட்டக்கோவையில் கூட அது 41 வருடங்களாக தூசு படிந்து போயுள்ளது.
மீண்டும் அதனை தூசு தட்டி எடுப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையிலும் கூட இதற்கு எதிர்ப்புகள் வரத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. சில சர்வதேச அமைப்புகள் கூட ஜனாதிபதியின் முடிவை ஆதரிக்கப் போவதில்லை.
மீண்டும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளை நிறுத்துமாறு அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.
மரணதண்டனையை நிறைவேற்றும் முடிவைக் கைவிடுமாறு மன்னிப்புச் சபை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
40 ஆண்டுகளுக்கு மேலாக மரணதண்டனையை நிறைவேற்றாமல் பெற்றுக் கொண்ட நற்பெயரை இலங்கை கெடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் மரணதண்டனை என்பது சட்டத்தின் படி கடந்த 40ஆண்டுகளாக நிறைவேற்றப்படாவிடினும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
அதனைவிடவும் மரண தண்டனை பாரதூரமானதல்ல. ஆனால் உரிய விசாரணைகள் இன்று போலிச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு அப்பாவிகள் கூட குற்றவாளிகளாக முத்திரை குத்தப்பட்டு தண்டிக்கப்படுகின்ற இந்த நாட்டில் மரண தண்டனை உரிய நீதிப் பொறிமுறைகளுடாக நிறைவேற்றப்படுமா என்பதில் தான் பாரிய சந்தேகம் காணப்படுகின்றது.
அரசியல் தலையீடுகளால் அப்பாவிகள் பாதிப்புறாமலும் குற்றவாளிகள் தப்பிக்காமலும் இருப்பது உறுதிசெய்யப்படுமா என்பதும் கேள்வியாகவே இருக்கின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.