கைதிகளின் போராட்டம் வன்முறையாக மாறியதற்கான காரணம் வெளியானது
In இலங்கை December 11, 2020 4:27 am GMT 0 Comments 1491 by : Yuganthini

மஹர சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதிலிருந்து தப்பிக்க கைதிகள் ஆரம்பித்த போராட்டத்தை, பாதாள உலகக் குழுக்களின் உறுப்பினர்கள் சிலரே வன்முறையாக மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹர சிறைச்சாலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய ஐந்து பேர் கொண்ட குழுவே இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த குழுவின் அறிக்கையை நீதியமைச்சர் நாடாளுமன்றில் தாக்கல் செய்திருந்தார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சில கும்பல் தலைவர்கள் ஒருவருக்கொருவர் பழிவாங்க முயன்றதால், கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறைக்கு திரும்பியுள்ளது.
மேலும், கைதிகள் யாரும் துப்பாக்கிகள் ஏதும் வைத்திருக்கவில்லை. அதிகாரிகள் மற்றும் நிலைமையைத் தணிக்க வந்தவர்கள் மாத்திரமே துப்பாக்கிகளை வைத்திருந்தனர்.
இருப்பினும், வாயிலுக்கு அருகில் மரக் கட்டைகள், இரும்பு கம்பிகள் மற்றும் கற்கள் இருப்பதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இதேவேளை சில கைதிகள், பல வகையான மாத்திரைகளைத் திருடி அவற்றை உட்கொண்டுள்ளமை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சிறை வளாகத்தில் இருந்த முக்கியமான ஆவணங்களை கைதிகள் எரித்துள்ளனர்.
அத்துடன் விளக்கமறியலில் கைதிகள் வைக்கப்பட்டுள்ள பகுதி தவிர, வளாகத்தில் உள்ள அனைத்து கட்டடங்களும் சாம்பலாக எரிக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று நேர்மறையாகக் கண்டறியப்பட்டவர்களைப் பிரிக்கவும், மற்றையவர்களை சுய தனிமைப்படுத்தலில் அந்தந்த வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அறிக்கையில் குறித்த குழு பரிந்துரைத்துள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.