அதிஷ்டம் இருந்தால் உலகக்கிண்ணத்தை வெல்வோம்: ஸ்டெயின்
வெல்ல கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் உலகக் கிண்ணத்தை வெல்வோம் என தென்னாபிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண தொடருக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“எங்கள் அணியில் சில தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். குயின்டான் டி கொக்கில் இருந்து 11ஆவது வீரர்கள் வரை போட்டியை வெற்றிபெற செய்பவர்கள் தான். நோ-பால் போன்ற விடயத்தில் கொஞ்சம் அதிர்ஷ்டம் தேவை. அப்படியிருந்தால் நாங்கள் தொடரை கட்டாயம் வெல்வோம்.
நீங்கள் கார்கிஸோ ரபாடாவை பார்த்தீர்கள் என்றால், அபாரமாக பந்து வீசி வருகிறார். அவரது திறமையை தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் சர்வதேச போட்டிக்குள் நுழைந்து, அவரது வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
சில வீரர்கள் வருவார்கள், சிறப்பாக செயல்படுவார்கள். திடீரென்று சென்று விடுவார்கள். ஆனால், ரபாடா போன்ற வீரர்களை நாம் பயன்படுத்தி கொள்ள முடியும்” என கூறினார்.
உலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றை பொறுத்தவரை, தென்னாபிரிக்க அணி அதிகபட்சமாக அரையிறுதி மட்டுமே முன்னேறியுள்ளது.
பலம் பொருந்திய வீரர்களை கொண்ட அந்த அணியால், இதுவரை உலகக்கிண்ண தொடரில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.ஆனால் இம்முறையாவது சாதிக்க வேண்டுமென அந்த அணி காத்திருக்கின்றது.
இங்கிலாந்து ஆடுகளங்கள் பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை என்பதால், தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ரபாடா, லுங்கி ங்கிடி மற்றும் ஸ்டெயின் ஆகியோர் அபாரமாக பந்து வீசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை அணியின் துடுப்பாட்ட வீரர்களான டு பிளெஸிஸ், மில்லர், டுமினி, அம்லா போன்ற அனுவம் வாய்ந்த வீரர்களும் வேகப்பந்து வீச்சுக்கு சிறப்பாக துடுப்பெடுத்தாடக் கூடியவர்கள்.
ஆகையால், இவ்வாறான சிறப்பான வீரர்களை கொண்டு இம்முறை உலகக்கிண்ண தொடரில், தென்னாபிரிக்கா அணி சாதிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
இதற்கிடையில், முன்னணி வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயின், இந்த உலகக்கிண்ண தொடருடன் ஓய்வு பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
35 வயதான டேல் ஸ்டெயின் இதுவரை, 125 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 196 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
அத்தோடு, தென்னாபிரிக்கா அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் உள்ளிட்ட பல சாதனைகளுக்கும் அவர் சொந்தக் காரர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.