கொரிய தீபகற்பத்தின் நிலையை எவராலும் கணிக்க முடியாது: வடகொரியா எச்சரிக்கை
வடகொரியா மீதான நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிக்கொள்ளாவிட்டால், கொரிய தீபகற்பத்தின் எதிர்காலத்தை எவராலும் கணிப்பிட முடியாதென வடகொரியா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் செயற்பாடு, வடகொரியா தமது அணுவாயுதத்தை மேம்படுத்த தூண்டுவதாக அமைந்துள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளது.
சக்திமிக்க ஆயுதங்களை தாங்கிச்செல்லும் வல்லமை கொண்ட வழிநடத்தல் ஆயுதமொன்றை வடகொரியா நேற்று பரிசோதித்துள்ளது. இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) அந்நாட்டு செய்திச் சேவை இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட உத்தியோகத்தர் வொன் ஜொங் குன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்தோடு, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுடனான பேச்சுவார்த்தையை வடகொரியா நிராகரித்துள்ளது. கலந்துரையாடலில் மேலும் முதிர்ச்சிபெற்ற ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
கொரிய தீபகற்பத்தில் அமைதியை ஏற்படுத்தும் முகமாக அமெரிக்கா மற்றும் வடகொரியாவிற்கு இடையில் இரண்டு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் கடந்த பெப்ரவரி மாதம் ஹனோயில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தமது நாட்டின் மீதான தடைகளை நீக்கவேண்டுமென வடகொரியா கோரியிருந்த நிலையில், அணுவாயுத சோதனை நடவடிக்கையை வடகொரியா முழுமையாக கைவிட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியது. இதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், பேச்சுவார்த்தை தோல்விகண்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.