கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்தல் – நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
In இலங்கை November 9, 2020 7:39 am GMT 0 Comments 2221 by : Dhackshala
கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்வதற்கான சாத்தியம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொள்ளுபிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பாக நேற்று முன்தினம் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பினால் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனக்கு வரும் 100 தொலைபேசி அழைப்புக்களில் 99 அழைப்புக்கள் முஸ்லிம்களை தகனம் செய்வதை தடுத்து நிறுத்தி அடக்கம் செய்ய அனுமதி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்தே வருகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம்களின் நியாயமான பிரச்சினையை நியாயமான முறையில் முன்வைக்கும்போது தமக்கு இனவாதிகள் என சாயம் பூசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகில் 189 நாடுகளில் அடக்கம் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இது தொடர்பாக விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து அடக்கம் செய்வதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கோரிக்கை விடுப்பதினால் நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்துற்கு சவால் விடுக்கின்றோம் என்ற அர்த்தமில்லை எனவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 காரணமாக மரணிப்பவர்களின் சடலங்கள் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய தகனம் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் முஸ்லிம்களின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், அது தொடர்பில் ஆராய அமைச்சரவையினால் 18 பேர் கொண்ட தொழில்நுட்ப குழு நியமிக்கப்பட்டது.
குறித்த குழுவுடனேயே நேற்று முன்தினம் கலந்துரையாடப்பட்டதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.