கொரோனாவுக்கான தடுப்பு மருந்தைப் பெறுவது குறித்து ரஸ்யாவுடன் முக்கிய பேச்சுவார்த்தை!
In இலங்கை December 22, 2020 4:49 am GMT 0 Comments 1624 by : Dhackshala
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை ரஸ்யாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவருவது குறித்து எதிர்வரும் வாரம் தீர்மானிக்கப்படவுள்ளது.
அதன்படி எதிர்வரும் வாரம் ரஸ்ய தூதுவருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்தால் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரம் வழங்கப்பட்ட மருந்துகள் கிடைப்பதற்கு முன்னரே ரஸ்ய மருந்தான ஸ்புட்னிக் வி தடுப்பூசி அரசதுறையினருக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
ரஸ்ய மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர், ரஸ்ய அரசாங்கம் தனது மருந்தினை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராகவுள்ளதால் அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மூலம் அந்த மருந்தினை கொண்டுவரமுடியும் என தெரிவித்துள்ளார்.
இதனைதவிர தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன எனவும் அதனடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எந்த மருந்தினை இலங்கைக்கு கொண்டுவரவேண்டும், என்னவிலை என்பது போன்ற விபரங்களை இதுவரை தீர்மானிக்கவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையினர் ஊடாக மருந்துகளை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தற்போது மொடேர்னா மற்றும் பைசர் நிறுவனத்தின் மருந்துகள் மற்றும் சீன மருந்துகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விலை சேமிப்பதற்கான காலநிலை போன்றவற்றின் அடிப்படையில் எந்த மருந்தினை விரைவில் இலங்கைக்கு கொண்டுவரமுடியும் என தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.