கொரோனா அச்சுறுத்தல்: கொழும்பு மாவட்டம் குறித்து எச்சரிக்கும் சுகாதார தரப்பினர்
In இலங்கை December 7, 2020 3:22 am GMT 0 Comments 1546 by : Yuganthini

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை கொழும்பிலேயே சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் குறித்த பகுதி மிகவும் அபாயமானது என சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா தொற்றின் 2 ஆம் அலையில் கொழும்பு மாவட்டமே அதிக பாதிப்புக்குள்ளாகி வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
கொழும்பு 1 தொடக்கம் 15 வரையான பகுதிகளிலும், வெலிக்கட, அங்கொடை, அத்திட்டிய, பொரல்லஸ்கமுவ, தெஹிவளை, கொத்தொட்டுவ, மடபத்த, புவக்பிட்டிய, ராஜகிரிய மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.
எனவே கொழும்பு மாவட்டமே தற்போது அபாயமான பகுதியாக காணப்படுகின்றது” என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, நேற்று 669 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில், அவர்களில் 487பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். ஏனைய 182 பேரும் சிறைச்சாலைகள் கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 27ஆயிரத்து 876ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 370 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 20 ஆயிரத்து 460 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் ஏழாயிரத்து 273 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, கொரோனா தொற்றினால் இதுவரை 137 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.