கொரோனா அச்சுறுத்தல்: வவுனியா நகரம் முடக்கப்படுகிறது?
In இலங்கை January 12, 2021 11:09 am GMT 0 Comments 1460 by : Yuganthini

வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் வவுனியா நகரினை முடக்குவதற்கு தாம் பரிந்துரை செய்துள்ளதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் வைத்தியர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கொவிட்19 அவசர கால நிலைமைகள் தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட கூட்டமொன்று இடம்பெற்றது.
இதன்போது இந்த விடயம் தொடர்பாக, மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் கொவிட்19 அவசர கால நிலைமைகள் தொடர்பில் வைத்தியர் மகேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “வவுனியா பிரதேசசெயலாளர் பிரிவில் 19 கிராம சேவகர் பிரிவுகளில் முழுமையான முடக்கத்தினை முன்னெடுக்குமாறு அரச அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளோம்.
அந்தவகையில் எ9 வீதியில் நொச்சிமோட்டை பாலம் மற்றும் இரட்டை பெரியகுளம் பகுதியில் அமைந்துள்ள நகரசபையின் வரவேற்பு வளைவு, மன்னார் வீதியில் நெளுக்குளம் பொலிஸ் நிலையம், பூந்தோட்டம் சந்தி, மாமடு சந்தி ஆகிய பகுதிகள் பொலிஸாரால் முடக்கப்படும்.
குறித்த பகுதிகளால் வவுனியா நகருக்கு உள்ளேவரும் பொதுமக்களுக்கு தடைவிதிக்கப்படும். இன்றிலிருந்து இரண்டு கிழமைகளிற்கு இந்த நடைமுறை நீடிக்கும். அவசர தேவைகள், அத்தியாவசிய தேவைகள், அரச ஊழியர்கள் வந்துசெல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
அத்துடன் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதரும் பேருந்துகள், முடக்கப்பகுதிக்குள் நிறுத்தாமல் செல்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான பரிந்துரைகளை நாம் அனுப்பியுள்ளோம். ஏனைய நடவடிக்கைகளை அரச அதிபர் முன்னெடுப்பார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.