கொரோனா உயர் ஆபத்தில் இரத்தினபுரி நகரம் உள்ளது- ஆளுநர்
In இலங்கை December 18, 2020 5:47 am GMT 0 Comments 1513 by : Yuganthini

கொரோனா வைரஸ் தொற்று அதிகளவு பரவுகின்றமையினால் இரத்தினபுரி நகரம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இரத்தினபுரி மாவட்ட பணிக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கூட்டத்தில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இரத்னபுரி- குடுகல்வத்த பகுதியில் 20பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் 7பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் இங்குள்ள ஆபத்து என்னவென்றால், இவர்கள் அனைவரும் எழுமாற்றாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர்.
இதேவேளை இரத்தினபுரி நகர எல்லையிலுள்ள அனைத்து மசூதிகளையும் இன்று (வெள்ளிக்கிழமை) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மாவட்டத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் மத சேவைகள், வழிபாட்டாளர்கள் இல்லாமல் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதேபோன்று இம்மாவட்டத்திலுள்ள செலான் வங்கி சந்தி முதல் டிப்போ சந்தி வரையுள்ள அனைத்து கடைகளையும் மூட முடிவு எட்டப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மற்றும் வணிக சமூகத்தின் பாதுகாப்பிற்காக அனைத்து வணிகர்களும் தங்கள் கடைகளை மூடுமாறு குழு அழைப்பு விடுத்துள்ளது.
ஆபத்தான சூழ்நிலை காரணமாகவே இரத்னபுரியில் உள்ள 3பள்ளிகள், இந்த மாதம் 18ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரத்தினபுரியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 572 ஆகும்.
ஆகவே, தற்போதைய ஆபத்து நிலைமை தீர்க்கப்படும் வரை இரத்னபுரி பகுதியில் போக்குவரத்தை கட்டுப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.