கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு 06, அரநாயக்க மற்றும் மாளிகாவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு பெண்களும், ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அரநாயக்க பகுதியை சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அநுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது மரணத்திற்கான காரணம் கொரோனா நியுமோனியாவில் தீவிரமடைந்தமை சுவாசத் தொகுதி தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொழும்பு 6 பகுதியை சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவர் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கொரோனா தொற்று உறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து நெவில் பெர்ணான்டோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்தார்.
அவரது, மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்றால் ஏற்பட்ட இதய நோய் நிலைமையாகும் என குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, மாளிகவாத்தை பகுதியை சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்தார்.
கொரோனா தொற்றால் சுவாசப்பை செயலிழந்தமையே அவரது மரணத்திற்கான காரணம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்கள அறிக்கை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை நேற்று(செவ்வாய்கிழமை) மாத்திரம் 660 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.