கொழும்பு குண்டுவெடிப்பு – இதுவரை 13 பேர் கைது
கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக தெமட்டகொட பகுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் இருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களில் இதுவரை 215 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆவர்.
நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பல குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று வந்த நிலையில், நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு, பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் போன்றவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னரும் கட்டநாயக்க விமான நிலையத்தில் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், மேலும் பல பகுதிகளில் குண்டுகள் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் முக்கிய பகுதிகள் மற்றும் வீடுகளிலும் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் உரிமைகோரவில்லை.
கடந்த 2019ஆம் ஆண்டு சிவில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் சம்பவமாக இத்தாக்குதல்கள் பதிவாகியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.