கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாடுகளுக்கு விற்க ஒப்பந்தம் செய்யவில்லை – ஐ.தே.க.
In இலங்கை January 21, 2021 11:13 am GMT 0 Comments 1495 by : Dhackshala

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் அல்லது துறைமுகத்தின் எந்தவொரு பகுதியையும் வேறு நாடுகளுக்கு விற்பதற்கு 2019இல் எமது அரசாங்கம் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என ஐக்கியத் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அந்தக் கட்சியால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், “கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் அல்லது அதன் எந்தவொரு பகுதியையும் இந்தியாவிற்கோ ஜப்பானுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ விற்பதற்கு 2019இல் எமது அரசாங்கம் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை.
கிழக்கு முனையத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிறுவனத்திற்கு மாத்திரமே ஒப்பந்தம் செல்லுபடியாகின்றதே தவிர மற்றுமொரு நாட்டுடன் அல்ல.
கிழக்கு முனையத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளை நிறுவனமொன்றிக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
அதற்கமைய 51 வீத உரிமத்தை இலங்கைக்கும் எஞ்சிய 49 வீதத்தை இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
அத்துடன் அந்த பணிகளை முன்னெடுக்க நிறுவனமொன்றை ஸ்தாபிக்கவும் உறுதி செய்யப்பட்டது. இதனடிப்படையில் மூன்று நாடுகளுக்கிடையில் ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்காக 2019 செப்டெம்பர் 10ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.
கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புகளை வழங்குவதற்கும் அதனை முகாமை செய்வதற்கும் டர்மினல் ஒபரேஷன் கம்பனி உருவாக்கப்பட்டது.
கிழக்கு முனையத்தை செயற்படுத்துவதற்கு குறிப்பிட்டவொரு காலம் டர்மினல் ஒபரேஷன் கம்பனிக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததோடு, அதன் பின்னர் அதனை செயற்படுத்துவது இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கமையவாகும்.
ஆகவே இங்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கிழக்கு முனையத்தை விற்பதற்கான நிலைப்பாடுகள் முன்வைக்கப்படவில்லை. அதன் அபிவிருத்தி மற்றும் செயற்பாடுகள் என்பவற்றை இரு கட்டங்களாக முன்னெடுப்பதற்கே தீர்மானிக்கப்பட்டிருந்தது” என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.