கொவிட் எதிர்ப்புகள்: மங்கோலியா பிரதமர் குரேல்சுக் உக்னா இராஜினாமா!

கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், மங்கோலியா பிரதமர் குரேல்சுக் உக்னா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அங்குள்ள மருத்துவமனையில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் கடும் குளிருக்கு மத்தியில் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்படும் காணொளி வெளியாகி பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தலைநகர் உலான் படோரில் சுமார் 5,000 இளம் எதிர்ப்பாளர்கள் அரசாங்க கட்டிடங்களுக்கு எதிரே ஒரு சதுரத்தில் கூடியிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக மங்கோலிய பாரம்பரியம், குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களுக்கு குளிர்ந்த காலநிலையையும் குளிர்ந்த உணவையும் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றது.
இந்த காரணத்தை முன்னிறுத்தி எதிர்ப்பாளர்கள் கோஷமிட்டு, பிரதமரை பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தினர். இந்தநிலையில், பிரதமர் உக்னா குரேல்சுக் நேற்று (வியாழக்கிழமை) பதவி விலகினார்.
இதுதொடர்பாக பிரதமர் குரேல்சுக் உக்னா கூறுகையில், ‘துரதிஷ்டவசமாக, அந்த தாயை இடமாற்றம் செய்யும் போது நாங்கள் தவறு செய்தோம். அவள் எவ்வாறு நடத்தப்பட்டாள் என்பதைப் பார்ப்பது மனம் உடைந்தது. ஒரு பிரதமராக, நான் பொறுப்பை ஏற்க வேண்டும்’ என கூறினார்.
தொற்றுநோயைக் கையாளும் தேசிய அவசர ஆணையத்தின் தலைவரான துணைப் பிரதமர் ஏற்கனவே புதன்கிழமை மாலை இராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து சுகாதார அமைச்சரும் பதவி விலகினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.