கொவிட்-19இல் இருந்து மாணவர்களைப் பாதுகாக்க அமெரிக்கா உதவி!

இலங்கையில், மாகாணம், வலயக் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நாடு முழுவதும் 120 பாடசாலைகளில் அமெரிக்கா சுகாதார அறைகளை அமைத்து வருகிறது.
இது, இலங்கையின் ஆயிரக்கணக்கான மாணவர்களின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுக்கு உதவுவதற்கான முன்னெடுப்பு என அமெரிக்காவின் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம், அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி முகவரமைப்பான சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) உடாக அமுல்படுத்தப்படுகிறது.
கொவிட்-19இற்கு எதிரான அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதற்கான கல்வி அமைச்சின் பரிந்துரைகளை இந்தச் சுகாதார அறைகள் ஊக்குவிப்பதுடன், படுக்கைகள், மெத்தைகள், முதலுதவி உபகரணங்கள், நகர்த்தக்கூடிய மறைப்புத் திரைகள், மற்றும் நீர் விநியோகிப்பான்கள் ஆகியவற்றை இவை கொண்டிருக்கும் என அமெரிக்கத் தூதரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தேவைப்படும் பட்சத்தில் இந்த அறைகள் மாணவர்களுக்கான தனிமை மற்றும் தொடர்புடைய கவனிப்பை வழங்குகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அநுராதபுரம், கண்டி, மொனராகலை, மற்றும் கம்பஹாவில் அமைந்துள்ள இந்தச் சுகாதார அறைகள் கொவிட்-19 தொற்றுநோய் பரவல் முடிவடைந்த பின்னரும்கூட மாணவர்களின் நல்வாழ்வை ஊக்குவிக்கும்.
மாணவர்கள் தங்களது பார்வையை சோதித்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், ஏனைய சுகாதார சேவைகளையும் அணுக முடியும் என்று அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதுகுறித்து, அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் கூறுகையில், “50 வருடங்களுக்கு மேலாக, அமெரிக்காவின் உலகளாவிய சுகாதாரத் திட்டங்கள் உயிர்களைக் காப்பாற்றியுள்ளன. நோயால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாத்துள்ளன. மற்றும் ஸ்திரமான சமூகங்களை ஊக்குவித்துள்ளன.
சந்தேகத்திற்கிடமான நோயாளிகளை தனிமைப்படுத்துவதில் சுகாதார அதிகாரிகளுக்கு உதவுவதன் மூலமும் இலங்கையின் கிராமிய பிரதேசங்களில் மாணவர்களின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலமும் கொவிட்-19 பரவலைக் குறைக்க நாம் உதவுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆய்வுகூட முறைமைகளைத் தயார்படுத்தல், நோயாளியைக் கண்டறிதல் மற்றும் நிகழ்வு அடிப்படையிலான கண்காணிப்பைச் செயற்படுத்துதல், பதிலளிப்பு மற்றும் தயார்நிலைக்கு தொழில்நுட்ப நிபுணர்களுக்கு உதவுதல் ஆகியவற்றின் மூலம் கொவிட்-19இற்கு எதிராகப்
போராடுவதற்கு அமெரிக்கா, இலங்கைக்கு உதவுகிறது.
இந்தச் சுகாதார அறைகளானது அமெரிக்கா, இலங்கைக்கு வழங்கியுள்ள ஆறு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான கொவிட்-19 உதவியின் ஒரு பகுதியாகும் என அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.